அரசியல்செய்திகள்

சோமாலியாவின் பிராந்திய ஐ.எஸ் தீவிரவாதிகளின் தலைவனொருவனை அமெரிக்கப் படைகள் கொன்றன.

சில நாட்களுக்கு முன்னர் சோமாலியாவின் வடக்குப் பிராந்தியத்திலிருக்கும் மலைக்குகைகளுக்குள் மறைந்திருந்த இஸ்லாமியத் தீவிரவாதிகள் இயக்கமான ஐ.எஸ் போராளிகளை அமெரிக்காவின் அதிரடிப் படை தாக்கியது. அப்பிராந்தியத்தின் தலைவனாக இருந்த பிலால் அல்-சுடானி என்பவனைக் கைப்பற்றுவதற்காக நடந்த இந்தத் தாக்குதலில் அவன் கொல்லப்பட்டதாக அமெரிக்கச் அதிகாரிகள் தெரிவித்தனர். 

சோமாலியவின் வடபிராந்தியத்திலிருக்கும் மலைப்பிரதேசங்களில் ஒளித்து வாழ்ந்துகொண்டு சோமாலியா, ஆப்கானிஸ்தான் உட்பட பல நாடுகளிலும் இஸ்லாமியத் தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்துபவர்களுக்கு அல் – சுடானி பொருளாதார உதவி செய்து வந்ததாக அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் லோய்ட் ஒஸ்டின் குறிப்பிட்டார்.  அதற்கு முன்னர் அல் -சுடானி சோமாலியாவில் அரசுக்கெதிராக இயங்கிவரும் அல் ஷபாப் தீவிரவாத இயக்கத்தின் நிதிகளுக்குப் பொறுப்பாக இருந்ததாகவும் அமெரிக்கச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சோமாலியாவின் பக்கத்து நாடான ஜுபூத்தியிலிருக்கும் அமெரிக்க இராணுவ முகாமிலிருந்து சோமாலிய அரசின் அல் -ஷபாப் இயக்கத்தினருக்கு எதிரான தாக்குதல்களுக்கு விமானப் பாதுகாப்புக் கொடுக்கப்பட்டு வருகிறது. சில சமயங்களில் அமெரிக்க இராணுவ அதிரடிப் படையினர் சோமாலியாவுக்குள் நுழைந்து தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *