ஐரோப்பிய எல்லைகளில் வேலிகள், மதில்கள் கட்டி அகதிகள் நுழையாமல் பாதுகாக்க வேண்டுமென்கிறது ஆஸ்திரியா.
ஸ்டொக்ஹோம் நகரில் நடந்துவரும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் உயர்மட்டத் தலைவர்களின் மாநாட்டில் விவாதிக்கப்படும் முக்கிய விடயங்களிலொன்றாக இருக்கிறது ஒன்றியத்தின் அகதிகள் பற்றிய நிலைப்பாடு. ஒன்றியத்தின் தற்போதைய தலைமையை எடுத்திருக்கும் சுவீடன் அரசு தேசியவாத, வலதுசாரிக் கொள்கைகளைக் கொண்டதென்பதால் எதிர்காலத்தில் ஐரோப்பாவுக்குள் வாழவரும் ஐரோப்பியரல்லாதோரின் எண்ணிக்கையைப் பெருமளவில் குறைக்கவேண்டும் என்ற திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது.
ஷங்கன் கூட்டுறவுக்குள் பல்கேரியா மற்றும், ருமேனியாவை நுழையவிடலாகாது என்று ஆஸ்திரியா மற்றும் நெதர்லாந்தால் தடுக்கப்பட்டது. அதற்கான காரணம் அவ்விரண்டு நாடுகள் தமது வெளி எல்லையைக் காப்பதில் தீவிரமாக இல்லை என்று கூறப்பட்டது. அதையடுத்து ஆஸ்திரியா முன்வைத்திருக்கும் கோரிக்கை பல்கேரிய – துருக்கிய எல்லையில் எவராலும் உட்புக முடியாத வேலியை அமைக்க ஐரோப்பிய ஒன்றியம் நிதி ஒதுக்கவேண்டும் என்பதாகும். அதற்காக சுமார் 2 பில்லியன் எவ்ரோக்களை பல்கேரியாவுக்குக் கொடுத்துதவவேண்டுமென்கிறார் பிரதமர் கார்ல் நேஹம்மர். பல்கேரிய வெளியெல்லையில் காவல் தீவிரமாக்கப்படாதவரையில் அந்த நாட்டை ஷங்கன் கூட்டுறவில் இணைக்க ஆஸ்திரியா மறுக்கும் என்கிறார் அவர்.
ஐரோப்பிய ஒன்றியத்தினுள் நுழைந்து தமது அகதிகள் விண்ணப்பம் மறுக்கப்பட்டவர்களை அவரவர் நாடுகளுக்குத் திருப்பியனுப்புவதை இலகுவாக்கும் சட்டங்களைக் கொண்டுவரவேண்டும் என்றும் நேஹம்மர் கோருகிறார். அதைப்பற்றிக் குறிப்பிட்ட ஒன்றியத்தின் குடிவரவு அமைச்சர் இல்வா யோகான்சன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களில் ஐந்திலொரு பேரே ஒன்றியத்தைவிட்டு வெளியேறுவதைச் சுட்டிக்காட்டினார். ஐரோப்பாவுக்குள் அகதியாக வாழ அனுமதி மறுக்கப்பட்டவர்களின் நாடுகளுடன் தொடர்புகொண்டு அந்தந்த நாடுகளின் குடிமக்களைத் திருப்பியனுப்புவதில் தீவிரம் காட்டவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்