அமெரிக்க வான்வெளியில் பறந்த ஆராய்ச்சி பலூனைச் சுட்டு வீழ்த்தியது தவறென்கிறது சீனா.

இந்த வாரத்தின் நடுப்பகுதியில் அமெரிக்காவின் வான்வெளியில் திடீரென்று காணப்பட்ட மிகப்பெரிய பலூன் ஒன்று அமெரிக்காவில் மட்டுமன்றி உலகெங்கும் ஆச்சரியத்தை உண்டாக்கியது. புதனன்றே அது சீனாவுடையதென்று அறியப்பட்டதுடன் அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையே வாக்குவாதங்கள் ஆரம்பித்தன.

அடுத்தடுத்த நாளே மேலும் ஒரு பலூன் அமெரிக்க வானில் பறந்தது. அந்த பலூன்கள் வானிலை பற்றிய ஆராய்ச்சிக்காகவே பறக்கவிடப்பட்டிருக்கின்றன என்று சீனா தரப்பில் வெளியிடப்பட்ட விளக்கம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உரசலைத் தணியவைக்கப் போதுமானதாக இருக்கவில்லை. அவைகள் உளவு பார்ப்பதற்காகவே அனுப்பப்பட்டிருப்பதாக அமெரிக்கச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. புதனன்றே பலூனைச் சுட்டு வீழ்த்தும்படி தான் உத்தரவிட்டதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காலத்திலேயே ஆரம்பித்திருந்த சீன – அமெரிக்க ராஜதந்திர, வர்த்தக விரிசல்கள் ஜோ பைடன் காலத்திலும் தொடர்கின்றன. எதிலும் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வுகள் காணவேண்டுமென்று சீனா மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தாலும் அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் அமெரிக்காவையும், ஐரோப்பிய நாடுகளையும் உசுப்பேத்துவதாகவே இருந்த் வருகின்றன.

ஒரு வழியாக, நீண்ட காலத்தின் பின்னர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் சீனாவுக்குப் பயணம் செய்து பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது. பலூன்கள் பற்றிய சர்ச்சை ஆரம்பித்ததுமே நடக்கவிருந்த சீன விஜயம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்கத் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. அப்படியொரு சந்திப்பு நடப்பதற்கான விபரமான திட்டங்கள் எதுவும் இருக்கவில்லை என்று சீனா தனது தரப்பில் குறிப்பிட்டது. அத்துடன், ஆராய்ச்சி பலூன்களைப் பற்றிச் சில அமெரிக்க அரசியல்வாதிகளும், ஊடகங்களும் பூச்சாண்டி கிளப்பியிருப்பதாகக் குறிப்பிடுகிறது சீன அரசு.

அமெரிக்காவின் நிலப்பிராந்தியத்தை விட்டு அகன்றவுடன் சீனாவுடைய பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அதை முதலே செய்யாமலிருக்கக் காரணம் பாதுகாப்பு பற்றிய அவதானமே என்றும் அவர் தெரிவித்தார். பலூன் அமெரிக்காவின் மொண்டானா நகர அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் மீது பறந்ததாகவும் அதன் நோக்கம் உளவு பார்ப்பதே என்றும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. சீனாவோ சாதாரண ஆராய்ச்சிக்கான பலூன் பாதை தவறிப் பறந்ததாகவும் அதைச்  சுட்டு வீழ்த்தியது சர்வதேசச் சட்டங்களுக்குப் புறம்பானது என்று குற்றஞ்சாட்டுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *