ஆலமரத்தின் வாக்கு மூலம்

ஒரு ஆலமரத்தின் வாக்குமூலம்! 

(இது பெருங்கவிதைக் கதை)

(முழுதாய் படித்தவர் கருத்திடுங்கள்..!!! முடியாதவர்.. கடந்திடுங்கள்)

“சங்கம் வைத்த காலத்திலே
எங்கும் முத்தமிழ் வளர்ந்திடவே
எங்கோ பறவை பழம்தின்று
இங்கே  வந்தது வான் பறந்து! 

பறவையின் எச்சமாய் 
பாறையில் விழுந்து
எச்சத்தில் மிச்சமாய்
காய்ந்து உருண்டு

விதையென மண்ணில் விழுந்து
புழுதியில் புரண்டு புதைந்து
‘சடச்சட’ மழையில் நனைந்து
‘சட்டென’ எழுந்தேன் முளைத்து.. 

முளைத்து மூன்று இலைவிடும் முன்னால்
வயல்வெளி வேலை செய்யும் பெண்ணால்.. 

கேட்டேனே தெம்மாங்கு
தென்றலில் ஆடும் தாலாட்டு! 
வரப்பில் பாய்ந்த நீர் உண்டு
வளர்ந்தேனே நானிங்கு! 

துளிர் விடும் இலைகூட
தளிர் என தலையாட்டி 
 கிளைவிட்டு அழகழகாய்
வளர்ந்திட்டேன் சிறு செடியாய்! 

தன்னந் தனியாய் யான் வளர்ந்தேன்
தனிமரமாய்த் தானிருந்தேன்
‘அனாதை’ என யார் சொல்வார்
அலாதி அன்பை நான் பெற்றேன்! 

ஒளி உணவை சூரியத்தந்தை தர
மழை உணவை பூமித்தாய் தர
சுற்றிவரும் தென்றலே தங்கையாய் வர
ஆனந்தமாய் ஆடிப்பாடி வளர்ந்த என்னை
‘அனாதை’ என யார்தான் சொல்வார்! 

சுற்றி எங்கும் பனைநண்பர்கள்
புளியமரங்களோ குருமார்கள்
தென்னை அழகிகள் தெரிவார்கள்
தலையசைத்து மகிழ்வார்கள்

ஆழத்தில் வேர் ஊன்றி
ஆலமரமும் நானாகி
ஆயிரம் கைகள் கிளையாகி
விழுதுகள் வந்தது தரை நோக்கி

விடலைகள் விளையாட
நிழல் தந்தேன் நிலையாக
கடலை போடும் காதலர்கள் கூட
சாய்ந்திருந்தார்கள் லீலைக்காக! 

பறவைகள் கூடு கட்ட
பல்லிகள் உச்சுக் கொட்ட
அணில்கள் உச்சி எட்ட
எறும்புகளுக்கோர் வாழ்விடம் கிட்ட

அழகிய ஜீவன்களின் சரணாலயமாய்
குளுகுளு நிழல் தரும் பூங்காவனமாய்
சிறுவர்கள் விளையாடும் மைதான மரமாய்
ஆலமரம் வாழ்ந்தேனே யாவர்க்கும் வரமாய்.. 

வருடங்கள் கடந்தோட
வளர்ந்தேனே வானம் தொட.. 
பருவங்கள் பலதாண்டி
நின்றேனே நிலைத்துவிட.. 

வந்ததொரு காகம்தான்
வாயில் வேப்பம்பழ
மிச்சம்தான்.. 
கடவாயில் அடக்கியது பிதுங்கியது
கரைகின்ற போதுதான்.. 

வழுக்கித் தவறியது வாயோரம்-
நழுவி  விழுந்தது என் காலோரம் 
குழியொன்றிருந்தது வேரோறம்-அதில் விழுந்து.. 
விதையாய் முளைத்தது இன்னோர் மரம்! 

ஆலமரம் நானோ ஆணானேன்
வேம்பாக வளர்ந்த அவள் பெண்ணாவாள்
செடிபோல வளர்ந்து மரமானவள்
ஜோடியாக சேர்ந்து எனக்கு மணமானாள்.. 

ஒட்டி வளர்ந்த வேம்பாளை
கட்டி அணைக்கும் அன்பானேன்
காதல் வாழ்ந்தது காலம் காலமாய்
காதலாய் வாழ்ந்தோம் ஆலவேப்பமாய்!

பரபரப்பாய் ஒருநாள் எனக்கமைய
கரும் இருட்டில்
சிலைக்கடத்தல்
திருடர் என் பின்னே ஒளிய.. 
விரட்டி வந்த காவலர்கள் 
தேடி அலைய.. 

நிலவொளியில் இருக்குமிடம் புலப்பட்டு.. 
கம்பி எண்ணுவார்கள் காவலரிடம் அகப்பட்டு

தூக்கி வந்த பிள்ளையாரை என்னிடம் விட்டு.. 
திக்குக்கொரு திசையினிலே அனைவரும் ஓடினார்கள்.. தறிகெட்டு! 
 
அடுத்தநாள் விடியலில்
பிள்ளையாரோ என் மடியினில்!. 
அதிசயமென்றார்.. ஊரினில்.. 
ஆனதொரு ஆலயம் இந்த ஆலமரத்தடியினில்! 

‘திடீர் பிள்ளையார்’ முளைத்துவிட்டார்
ஒருவர் ஒவ்வொருவராய் பரப்பிவிட்டார்
கூட்டங் கூட்டமாய் வரவழைத்தார்.. 
கூடியே எல்லோரும் பொங்கல் வைத்தார்! 

பிள்ளை இல்லா குறைகளை
பிள்ளையார் தீர்த்தார்
ஆலவேம்பு தம்பதி எங்களுக்கு 
பிள்ளையாக ஆனார்

நாங்கள் வாழ்ந்திருந்த
சோலை அருகே.. 
கோவில் உருவாகி ஊராச்சு.. 
கடைகள் சுற்றிச் சுற்றி போட்டாச்சு.. 
சாலை வசதியும் உண்டாச்சு! 

காலம் செல்லச் செல்ல
வாகனங்கள் பெருகப் பெருக
சுற்றி இருந்த விளை நிலமெல்லாம்
கட்டிடங்களுக்காய் விலைபோக.. 

காடெல்லாம் நாடாச்சு
காலம் பல கடந்தாச்சு
வாகனங்கள் பெருத்தாச்சு
சாலையெல்லாம் விரிவாச்சு! 

சாலையோர மரங்களெல்லாம்
சண்டாளர்களுக்கு பலியாச்சு
அறுத்த மரம் விறகாச்சு
நகரமெல்லாம் நரகமாச்சு

மழைக்காலம் மாறிப்போச்சு
நடக்க முடியா வெய்யிலாச்சு
குளுமை தந்த நிழல்களெல்லாம்
பழங்கதையில் காணலாச்சு! 

தங்க முட்டை
வாத்துக் கதைபோல்
எங்கும் அறுத்து 
மரத்தைச் சாய்த்து

விறகை விற்று
லாபம் பெற்று
வருங்கால சந்ததிக்கு
வரட்சிதான் ‘பற்று’! 

மரங்கள் பல செத்துப்போச்சு
நதிகளெல்லாம் நாசமாச்சு
கிணற்றுத் தண்ணீர் வத்திப்போச்சு
‘மினரல்’ தண்ணீர் விக்கலாச்சு! 

எலும்பு சத்து குறைந்து போக
சக்கரை நோயில் குழந்தை நோக
காய்கறிகளும் மருந்தில் வாழ
நோய்களினால் இளமையில் சாக

சூழ்ச்சியில் நிகழ்காலம்
வீழ்ச்சியில் எதிர்காலம்
வாழ்க்கையோ சிலகாலம்
வாழுமோ புவிக்கோளம்! 

சாலை விரிவாக்கத்துக்கு
மரங்கள் பலியாகாமல்
புடுங்கி நடும் திட்டங்களும்
மாற்றுப்பாதை சட்டங்களும்.. 

எத்தனைதான் இருந்தும் என்ன
அத்தனை உயிரும் வாழுமா என்ன
பித்தலாட்ட அதிகாரிகள் சொன்ன
கட்டளை ஆட்டம்தான் மரங்களைக் கொல்ல! 

அறுத்த மரம் துண்டாகி விலக்க
அங்கங்கே கிளைகள் கிடக்க.. 
காக்கைக் குஞ்சுகள் சாலையில் துடிக்க… 
அணில் எறும்புகள் அலறித் தவிக்க.. 

ஒட்டி நின்ற வேம்பவளை
வெட்டி வீசினார்கள் கண்ணெதிரே
கட்டித்தாவிய கைக்கிளையை
கட்டைக்கு அறுத்தார்கள் கயவப்பாவிகள்! 

கோயில் மரமென்ற காரணத்தாலே
கொஞ்சநாள் வாழ்ந்தேன் தனிமரமாக
சாலை ஓரத்து பாதிமரமாக
நானும் இருந்தேன் நட்ட பிணமாக.. 

என்னவளும் எரிந்திருப்பாள்
கதவு ஜன்னலாய் வடிந்திருப்பாள்
தோழமை மரங்களெல்லாம்
சட்டத்தால் ‘சட்டங்’களாக

சாமி மரம் நான் மட்டும்
தனித்து நின்று இலையுதிர்த்தேன்
ஆகாய தெய்வத்திடம்
அனுதினமும் வேண்டி நின்றேன்.. 

கேடுகெட்ட மனிதர்களுக்கு
வீடு கட்ட மரம் வேண்டும்.. 
எங்கள் உடல்களை அறுத்து 
இளைத்து கதவு செய்து 
சாத்த வேண்டும்… 

மரமில்லா தேசத்திலே
மழைவருமா மடையர்களே
வீட்டைக் கொழுத்திக் குளிர் காயும்
செயல்போலத்தான் மரஅறுப்பு! 

மரம் வளர்த்த நல்லவர் காலம்
இறந்த காலமாய் இருக்கும்போது
இயற்கையை அழிக்கும்
இழியவர் காலம் 
இதுதானோ கலிகாலம்! 

பட்டதெல்லாம் போதுமென்று
விட்டுவிட்டேன் வேர் உணவை.. 
பசும் இலைகள் உதிர்ந்துவிழ
பட்டுப்போனேன் பட்டமரமாய்! 

இங்கிருக்க விரும்பவில்லை 
இறைவா எனைக் காப்பாற்று என
இரண்டு கிளைகளை
வானம் நோக்கி.. 
விரித்தபடி வேண்டி நின்றேன்… 

ஆகாயத்தின் இடிமுழக்கம்
மின்னலாகி என்னைத்தொட
நின்ற இடத்தில் வேள்வியாகி
எரிந்து நின்றேன் ஜோதியாகி.. 

என்னுயிரும் புகையாகி
வானில் சேர்ந்தது மேகமாகி.. 
அனாதையான பிள்ளாயார் மீது
அழகாய் பெய்தது இறுதி மழை!! 

                 வீரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *