வேட்பாளரும் வாக்காளரும்..!
தேர்தல் தேதி
அறிவிக்கப்பட்டவுடன்
என் நாட்டு மக்கள்
சிந்திக்க
தொடங்கி விடுகின்றனர் …
யார் நல்லவர்
யார் கெட்டவர் என்றல்ல…
“யார் எவ்வளவு பணம்
கொடுப்பார்கள் ?
யார் என்ன பொருள்
தருவார்கள்?” என்று …..
வேட்பாளர்கள்
வெற்றி பெறும்வரை
“பிரியாணி சோறு”
போடுவார்கள்
வெற்றி பெற்றப் பிறகு
“பழையச்சோறு” கூட
போட மாட்டார்கள் என்று
தெரிந்தும்
தெரியாதவர் போல்
நடப்பது தான்
விந்தையிலும் விந்தை
வியப்பிலும் வியப்பு …..!!!
இரவானாலும்
கதவைத்
தாழ்பாள் போடாமலேயே
வைத்திருக்கின்றனர்…
இமைகளை
மூடாமல்
திறந்திருக்கின்றனர்….
யாரேனும்
பொருள்
பணம் கொடுக்க
வருவார்கள் என்று ….|
வேட்பாளர்கள்
கொடுத்த
சேலையின் தரத்தை
மறக்காமல்
பார்க்கும் பெண்கள் …..
ஏனோ ?
வேட்பாளர்களின் தரத்தை
பார்க்க மறந்து
விடுகின்றனர்….
ஒரு நாளைக்கு
“மூன்று வேளை”
பிரியாணி சோற்றை
கொடுத்துவிட்டு…
“ஒவ்வொரு நாளும்
ஒருவேளை”
உணவையே !
அவர்கள்
திருடப் போகிறார்கள் என்பதை
இந்த ஆண் சமுதாயம்
என்று உணருமோ…?
அந்த ஊரில்
எவ்வளவு கொடுத்தார்கள்
இந்த ஊரில்
எவ்வளவு கொடுத்தார்கள்
என்று அறிந்துகொள்ள
ஆசைப்படுபவர்கள்….
ஏனோ ?
“அந்த அரசியல்வாதி
என்ன செய்தான் ?
இந்த அரசியல்வாதி
என்ன செய்தான் ?என்று
அறிய ஆசைப்படுவதில்லை….
“வாக்குரிமையை”
விற்றுவிட்டு
“வாழ்வுரிமைக்காக”
போராடுவதே!
என் நாட்டு மக்களுக்கு
வாழ்க்கையாகி விட்டது…
குடி
குடியை மட்டுமல்ல
“குடியாட்சியையும்”
கெடுக்கும் என்று
இனியாவது
மது பாட்டிலில் எழுதுங்கள்….!!!
இனி வருங்காலங்களில்
தேர்தலின் போது
“கை நீட்டுவோம்
மை வைக்க மட்டுமே….!”
எழுதுவது
*கவிதை ரசிகன் குமரேசன்*
🧑🧑🧒🧒🧑🧑🧒🧒🧑🧑🧒🧒🧑🧑🧒🧒🧑🧑🧒🧒🧑🧑🧒🧒🧑🧑🧒🧒🧑🧑🧒🧒🧑🧑🧒🧒🧑🧑🧒🧒🧑🧑🧒🧒