அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்து பாவனைக்கு அனுமதிக்கப்படுவது பின்போடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பாவனைக்காகத் தமது தடுப்பு மருந்தை விற்பதற்கான விண்ணப்பத்தை அஸ்ரா செனகா நிறுவனம் இதுவரை அனுப்பிவைக்காததால் அந்த மருந்துக்கான அனுமதி தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக ஒன்றியத்தின் மருந்துப்பாவனை அனுமதிப்பு திணைக்கள [EMA] உப நிறுவனர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஒன்றிய நாடுகளில் வெவ்வேறு நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளைப் பாவிப்பதன் மூலம் பலமான ஒரு பாதுகாப்பை மக்களுக்குக் கொடுக்க நாடுகள் விரும்புகின்றன. தற்போது Pfizers Biontech நிறுவனத்தில் தடுப்பு மருந்தை மக்களுக்குக் கொடுக்க ஆரம்பித்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியம் ஜனவரி மாதத்தில் கூட அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்தைப் பாவிப்பதற்கு அனுமதி கொடுக்கக்கூடியதான விபரங்களை அந்த நிறுவனம் இதுவரை அனுப்பிவைக்கவில்லை என்று குறிப்பிடப்படுகிறது.
இதுபற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில் அஸ்ரா செனகா நிறுவனம் வெவ்வேறு நாடுகளுக்குக் அவ்வப்போது தமது தடுப்பு மருந்துகளின் விபரங்களை அனுப்பிவைத்து வருவதாகவும், முழுவதுமாக ஒரு அனுமதிகேட்கும் விண்ணப்பத்தை அவர்கள் எதிர்பார்ப்பதாகத் தமக்குத் தெரியவில்லையென்கிறார் நிறுவனத்தின் வெளிவிவகாரத் தொடர்பு அதிகாரி.
ஐக்கிய ராச்சியம் ஜனவரி 4 ம் திகதி அஸ்ரா செனகாவின் மருந்தைத் தனது மக்களுக்குக் கொடுக்க ஆரம்பிப்பதாக அறிவித்திருக்கிறது. அதுபற்றிய கருத்து எதையும் தான் சொல்லமுடியாது என்கிறது ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்து அனுமதித் திணைக்களம்.
சாள்ஸ் ஜெ. போமன்