அமெரிக்க செனட் சபையில் இன்று அமெரிக்க பாராளுமன்றக் கட்டடத் கலவரத்துக்காகத் டிரம்பைத் தண்டிக்கலாமா என்ற கேள்வி இன்று எழுகிறது.

பதவியிலிருந்து இறங்கிவிட்ட ஒரு அமெரிக்க ஜனாதிபதியைத் தண்டிக்க விசாரணை நடத்துவது ஒரு அரசியல் நாடகம் என்கிறார்கள் டிரம்ப்பின் வழக்கறிஞர்கள். ஜனவரி 06 இல் சில நூறு பேர் அமெரிக்கப் பாராளுமன்றக் கட்டடத்துக்குள் நுழைந்து கலவரம் செய்யத் தூண்டியது டிரம்ப்பே என்று வாதாடுகிறார்கள் டெமொகிரடிக் கட்சியினர்.

ஒன்பது டெமொகிரடிக் கட்சி செனட்டர்கள் அரச வழக்கறிஞர்கள் போலக் குறிப்பிட்ட அந்த நாளில் நடந்த வன்முறைகளுக்குக் காரணம் டிரம்ப் அவர்களைத் தூண்டிவிட்டதே என்று  சபையின் முன்னால் தமது காரணங்களை எடுத்துரைக்கவிருக்கிறார்கள். சில நாட்களுக்குத் தொடரப்போகும் அந்த நிகழ்வின்போது கலவர நாளில் எடுக்கப்பட்ட படங்கள் பலவும், டிரம்ப் அதற்கு முன்னர் அவர்கள் முன்னர் பேசிய பேச்சும் காட்டப்படவிருக்கின்றன. 

https://vetrinadai.com/news/capitol-riots-prosecution/

டிரம்ப்பின் சார்பில் வாதாடவிருக்கும் வழக்கறிஞர்கள் டிரம்ப் தனது பேச்சில் குறிப்பிட்ட விடயங்கள் அமெரிக்கக் குடிமக்கள் எவருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் கருத்துரிமைகளுக்கு உட்பட்டவையே என்று குறிப்பிட்டு வாதாடவிருக்கிறார்கள். அத்துடன் பதவியிலிருந்து இறங்கிவிட்ட ஒரு ஜனாதிபதியை நீதிமன்றத்தில் நிறுத்திப் பதவிக்கால நடத்தைகளுக்காகத் தண்டிக்க முடியாது என்பதும் அவர்களுடைய முக்கிய வாதமாகும். அது அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டவிருக்கிறார்கள்.

குறிப்பிட்ட அந்தப் பேச்சைத் தவிர நவம்பர் தேர்தலுக்குப் பின்னர் டிரம்ப் பல தடவைகள் தேர்தலில் தில்லுமுல்லுகள் நடந்ததாகவும், தனது வெற்றியைப் பறித்துவிட்டார்கள் என்றும் ஆதாரமின்றிக் குறிப்பிட்டுத் தனது ஆதரவாளர்களை ஏற்கனவே உசுப்பேத்தியிருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.டெமொகிரடிக் கட்சியினர். 

தற்போதைய நிலையில் டிரம்ப் தண்டிக்கப்படுவார் என்பதை நம்பமுடியாது என்றே பலரும் கணிக்கிறார்கள். காரணம் செனட் சபையில் இவ்விடயத்தில் வெற்றிபெற மூன்றிலிரண்டு பங்கு வாக்குகள் கிடைக்கவேண்டும். அதாவது டிரம்ப்பின் கட்சியிலிருந்து 17 பேர் அவரைத் தண்டிக்க ஆதரவு கொடுக்கவேண்டும். அத்தனை ரிபப்ளிகன் கட்சி செனட்டர்களின் ஆதரவு இதுவரை இவ்விடயத்தில் இல்லை.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *