ருமேனியா தனது தடுப்பூசி ராஜதந்திரத்தைப் பிரயோகிக்கும் நாடு குட்டி மோல்டோவா.
ருமேனியாவின் எல்லை நாடுகளிலொன்றான மோல்டோவா ஐரோப்பிய ஒன்றியமும், ரஷ்யாவும் தத்தம் வலையில் இழுக்க விரும்பும் ஒரு நாடாகும். 3.5 மில்லியன் மக்களைக் கொண்ட, ஏழை நாடான மோல்டோவா பல ஆண்டுகளாகவே ஸ்திரமற்று, லஞ்ச ஊழல்களால் சிதிலமடைந்திருக்கிறது. தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ய வசதியற்ற மோல்டோவாவுக்கு 200,000 தடுப்பு மருந்துகளைக் கொடுப்பதாக ருமேனியா உறுதியளித்திருந்தது.
அதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னர் தான் உலக வங்கியில் பொருளாதார அதிகாரியாக இருந்த ஐரோப்பிய ஒன்றிய ஆதரவாளரான மாயா சாந்து, தனக்கெதிராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ரஷ்ய ஆதரவாளரான இகோர் டூடனை வெற்றிபெற்றிருந்தார்.
மோல்டோவாவை ஐரோப்பிய ஒன்றியத்தின் பக்கம் இழுக்கும் நோக்கத்துடன் தனது நாட்டில் லஞ்ச ஊழலை ஒழித்துக் கட்டுவதாக உறுதிபூண்டிருக்கும் மாயா சாந்துவின் கைகளைப் பலப்படுத்தவே ருமேனியா அவர்களுக்குத் தடுப்பூசிகளை இலவசமாகக் கொடுப்பதாக உறுதிகொடுத்தது.
அதன் முதல் பகுதியான 21,600 அஸ்ரா செனகா தடுப்பு மருந்துகளைச் சனியன்று ருமேனியா தனது பக்கத்து நாட்டுக்கு அனுப்பிவைத்திருக்கிறது. அதே சமயம் மார்ச் முதல் வாரத்தில் உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் கோவக்ஸ் திட்டத்தின் மூலம் இலவசமாக ஒரு தொகை தடுப்பு மருந்துகள் மோல்டோவாவை எட்டும் என்று அரசு குறிப்பிடுகிறது.
இதற்கு நடுவே ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த இகோர் டோடன் ரஷ்யாவிலிருந்து ஸ்புட்நிக் V தடுப்பு மருந்துகள் கிடைக்க இருந்ததாகவும் அதை மாயா சாந்துவின் அரசு பெற்றுக்கொள்ளவில்லை என்றும் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்