தனது விசுவாசிகளிடையே தோன்றி வெள்ளை மாளிகைக்குள் 2024 இல் மீண்டும் புகத் தயாராக இருப்பதாக சைகை காட்டினார் டிரம்ப்.
அமெரிக்காவின் பழமைவாதிகளின் வருடாந்தர மாநாட்டில் (CPAC) பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சுமார் ஒன்றரை மணி நேரம் டொனால்ட் டிரம்ப் பேசினார். இதுவரை பதவியை விட்டிறங்கிய ஜனாதிபதிகள் போல அரசியலில் மென்மையான பாதையை எடுக்காமல் தனது வழக்கமான அதிரடி பாணியில் மீண்டும் ஜனாதிபதியாகத் தயாராக இருப்பதாக அவர் சைகை காட்டினார்.
தனது உதவியாளர்கள் ஆலோசனைகளை ஒதுக்கிவிட்டுத் தொடர்ந்தும், நவம்பர் தேர்தலில் தில்லுமுல்லு செய்யப்பட்டதாலேயே தான் தோல்வியடைந்ததாகச் சொன்னார் டிரம்ப். ஜனவரி 06ம் திகதி பாராளுமன்றக் கட்டடத்துக்குள் தனது ஆதரவாளர்கள் நடாத்திய வன்முறைகளுக்காகத் தன்னை நீதியின் முன் நிறுத்தித் தண்டிப்பதற்காக வாக்களித்த தனது கட்சிச் சகாக்களுக்கு வார்த்தையடிகள் கொடுக்கத் டிரம்ப் தவறவில்லை.
புளோரிடாவில் வியாழன்று முதல் நடந்த அந்தப் பழமைவாதக் கோட்பாட்டாளர்களின் மாநாட்டில் தங்க முலாம் பூசப்பட்ட டிரம்ப்பின் சிலை வைக்கப்பட்டிருந்தது. டிரம்ப்பின் விமர்சகர்களெல்லாம் தாங்களாகவே கலந்துகொள்ளாமல் ஒதுங்கிக்கொள்ளாதவரை அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை. எனவே அங்கே வந்திருந்தவர்களில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லாத டிரம்ப் விசுவாசிகளே என்பதால் அவரது பேச்சுக்கு வார்த்தைக்கு வார்த்தை நல்ல ஆதரவும், கைதட்டல்களும் கிடைத்தன. உதாரணமாக மாஜி உப ஜனாதிபதி மைக் பென்ஸ் தானாக ஒதுங்கிக்கொண்டார், மிச் மக்கொனலுக்கு அழைப்பிதழே அனுப்பப்படவில்லை. கலந்துகொண்ட பத்திரிகையாளர்கள் விமர்சிக்கும் கேள்விகள் கேட்டபோது சுற்றியிருந்தவர்கள் ஊளையிட்டு அடக்கியதாகவும் குறிப்பிடப்பட்டது.
பதவியேறிய ஜோ பைடனையும் அவரது ஆட்சியின் நடவடிக்கைகளையும் படு இடதுசாரித்தனமானவை என்று விமர்சித்தார் டிரம்ப். நடந்த மாநாட்டின் நடவடிக்கைகளும், தொடர்ந்தும் ரிபப்ளிகன் கட்சிக்குள் நடந்துவரும் கருத்து முரண்பாடுகளும் அக்கட்சியின் பெரும்பான்மையினரை டொனால்ட் டிரம்ப் தொடர்ந்தும் தனது பிடிக்குள் வைத்திருக்கிறார் என்பதும் காட்டுகின்றன. எனவேதானோ என்னவோ அவர் தான் புதுக் கட்சி எதுவும் தொடங்கப்போவதாக அறிவிக்கத் தேவையிருக்கவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்