ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விஜயம் செய்யவிருக்கிறார் இஸ்ராயேல் பிரதமர் நத்தான்யாஹு.
ஆபிரஹாம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அரபு நாடுகளுடனான நெருக்கத்தை அதிகப்படுத்திக்கொண்டபின் முதலாவது தடவையாக எமிரேட்ஸுக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்யவிருக்கும் நத்தான்யாஹு அபுதாபி இளவரசம் முஹம்மது பின் சாயிதைச் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாளை வியாழனன்று இவ்விஜயம் நிறைவேறவிருக்கிறது.
இதற்கு முன்னரே நத்தான்யாஹு இரகசியமாக எமிரேட்ஸுக்கு விஜயம் செய்ததாக ஓரிரு தடவைகள் செய்திகள் வெளிவந்தாலும் அதை இஸ்ராயேல் மறுத்திருந்தது. ஆனால், உத்தியோகபூர்வமான பயணத் திட்டங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் திட்டமிடப்பட்டு கொரோனாக் கட்டுப்பாடுகள் காரணமாக நிறுத்தப்பட்டிருக்கின்றன.
வியாழனன்று ஒரு தனி விமானத்தில் அபுதாபிக்குச் செல்லும் நத்தான்யாஹு மாலைக்கு முன்னரே நாடு திரும்புகிறார். அவர் அபுதாபி இளவரசனை விமான நிலையத்திலேயே சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடாத்துவார் என்று தெரிகிறது. மாலை 18.00 க்கு ஜெருசலேமில் ஹங்கேரியின் பிரதமரைச் சந்திப்பதற்காக நத்தான்யாஹு திரும்பியிருப்பார்.
ஜோர்டான் நாட்டின் வான்வெளியினூடாக இப்பயணத்தைச் செய்வதில் அந்த நாட்டின் அரசுடன் ஏற்பட்ட பிணக்கங்களால் திட்டமிடப்பட்டிருந்த பிரயாணத்தை ஒத்திவைத்துவிட்டதாகப் பிரதமர் நத்தான்யாஹூவின் அலுவலகத்திலிருந்து அறிவிக்கப்பட்டது.
சாள்ஸ் ஜெ. போமன்