தனது நாட்டில் கொவிட் 19 வராமல் கடவுள் காப்பாற்றிவிட்டதாகச் சொன்ன தன்சானிய ஜனாதிபதி அவ்வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளாரா?
தன்சானியாவின் ஜனாதிபதி ஜோன் மங்குபுலி, கென்யாவின் தலைநகரான நைரோபியில் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருப்பதாக அங்கிருந்து செய்திகள் வெளியாகின்றன. அவ்வியாதியையை முழுசாக மறுதலித்து நாட்டில் அதைத் தடுக்க எவ்வித ஏற்பாடுகளும் செய்ய மறுத்துவிட்டவர் ஜோன் மங்குபுலி.
இரகசியமாகக் கசிந்த செய்திகளின்படி தன்சானிய ஜனாதிபதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை எடுத்துவருவதாகச் சொல்வதை கென்யாவின் மருத்துவ சேவை மறுக்கிறது. ஆனால், தன்சானிய அரசு அதைப் பற்றி எதையும் சொல்ல மறுத்து வருகிறது. சுமார் பதினொரு நாட்களாக ஜோன் மங்குபுலி எவரது கண்களிலும் படவில்லை. வழக்கமாக நாட்டின் விழாக்களிலெல்லாம் பங்குபற்றும் அவர் தான் பங்குபற்றுவதாக இருந்த இரண்டு விழாக்களில் தலை காட்டவுமில்லை.
“தடுப்பு மருந்துகள் ஆபத்தானவை என்பதில், நாங்கள் தெளிவாக இருக்கவேண்டும். வெள்ளையன் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது உண்மையானால் அவன் எய்ட்ஸ், காச நோய், மலேரியா ஆகியவைக்கும் புற்று நோய்க்கும் தடுப்பு மருந்து கண்டுபிடித்திருப்பான்,” என்று சொல்லிக் கொவிட் 19 தடுப்பு மருந்து தங்கள் நாட்டுக்குத் தேவையில்லையென்று சொல்லியிருந்தார். கடந்த ஏப்ரல் மாதத்தின் பின்னர் நாட்டின் கொவிட் 19 பரவல் புள்ளிவிபரங்களையும் வெளியிடுவதை அவர் நிறுத்திவிட்டிருந்தார்.
தன்சானியாவின் எதிர்க்கட்சித் தலைவர்கள் தமது நாட்டின் ஜனாதிபதி எங்கே என்ற கேள்வியையும் அவர் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பதையும் கேட்டு வருகிறார்கள். ஆபிரிக்காவின் பல உயர்மட்டத் தலைவர்களும் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள். அதே சமயம் ஒரு பகுதி ஆபிரிக்க நாட்டுத் தலைவர்கள் அவ்வியாதியையே மறுத்து வருகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்