பிரான்ஸில் இந்த வாரம் முதலாவது விண்வெளிப் பாதுகாப்பு ஒத்திகை!
பிரான்ஸின் முதலாவது விண்வெளிப் பாதுகாப்பு இராணுவ ஒத்திகை (space military exercise) இந்த வாரம் நடைபெற்று வருகிறது. கடந்த திங்களன்று ஆரம்ப மான ஒத்திகையின் இறுதி நாளான நாளை வெள்ளிக்கிழமை அதிபர் மக்ரோன் அதனை நேரில் பார்வையிட வுள்ளார். அதற்காக துளுஸில் (Toulouse) உள்ள விண்வெளிப் பயிற்சிக் கற்கை கள் நிலையத்துக்கு அவர் விஜயம் செய்கிறார்.
விண்வெளி இராணுவ ஒத்திகைக்குப் AsterX-2021 எனப் பெயரிடப்பட்டுள்ளது. AsterX என்பது 1965 இல் பிரான்ஸ் விண்வெளிக்கு அனுப்பிய முதலாவது செய்மதியின் பெயர் ஆகும். பிரான்ஸ் அதன் செய்மதிகளைப் பாதுகாப்பதற்கு எடுக்கின்ற முதலாவது பயிற்சி நடவடிக்கை மட்டுமன்றி ஜரோப்பாவில் நடக்கின்ற முதலாவது விண்வெளிப் பாதுகாப்பு இராணுவ ஒத்திகையும் இதுவே ஆகும்.
ஜேர்மனியின் விண்வெளி நிலைவர நிலையம் (Space Situation Center) அமெரிக்காவின் விண்வெளிப் படை (“Space Force”) ஆகியனவும் ஒத்திகையில் பங்கெடுக்கின்றன.சமீப காலமாக பிரான்ஸ் தனது விண்வெளிப் பாதுகாப்புத் தந்திரோபாயம் தொடர்பாக மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.
2017இல் பிரான்ஸ்-இத்தாலி கூட்டு இராணுவத் தொலைத்தொடர்பு செய்மதியை ( ‘Athena-Fidus’) ரஷ்யாவின் உளவு செய்மதி ஒன்று நெருங்க முற்பட்டது எனக் கூறப்படுகிறது. இது போன்ற சம்பவங்கள் விண்வெளியின் பாதுகாப்பு மீது தீவிர கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை உருவாக்கி உள்ளன. பிரான்ஸ் முப்படைகளுக்கு மேலதிகமாக தனது விண்வெளிப் படைப்பிரிவை அண்மையில் நிறுவி இருந்தது. துளுஸ் (Toulouse) பிராந்தியத்தில் கட்டளை மையத்தைக் கொண்டு அந்தப் புதிய படைப்பிரிவு இயங்கி வருகிறது.பூமிக்கு மேலே சுற்றுவட்டப் பாதையில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட செய்மதிகள், வான் கலன்கள் பற்றிய தரவுகளை பிரான்ஸ் கண்காணித்து வருகிறது.
தனது செய்மதிகளை எதிரி நாடுகளின் உளவு வான் கலங்கள் அணுகாமல் இருப்பதைக் கண்காணித் துப் பாதுகாக்கும் நோக்கில் நவீன கமெராக்கள், லேசர் வசதிகள் கொண்ட ரோந்து செய்மதிகளை (Patrol satellites) விரைவில் விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகம் செய்மதிகளது தொடர்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இணையம் முதல் வர்த்தகம் வரை,நாளாந்த வாழ்வு செய்மதிகளில்தான் தங்கியிருக்கிறது. செய்மதி ஒன்று தாக்கப்பட்டால் உலகம் முற்றாக ஸ்தம்பிக்கக் கூடிய அபாயம் உள்ளது. அந்தளவுக்கு உலகின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பில் செய்மதி களின் பங்கு முக்கியமாக உள்ளது.
நாடுகளை வீழ்த்துவதற்கான போர்கள் இனி விண்வெளியில் கூட நடக்கலாம். அதற்குத் தயாராகின்ற வல்லரசுகள் விண்வெளியில் போர் ஒத்திகைகளைத் தொடக்குகின்றன.அதனால் விண்வெளியும் இராணுவ மயமாகின்றது.
குமாரதாஸன். பாரிஸ்.