நாட்டில் கடுமையான பொது முடக்கங்கள், தனது 60 வயதுக் கொண்டாட்டத்தில் கட்டுப்பாடு மீறல் – நோர்வே பிரதமர்.
உலகின் வெவ்வேறு நாடுகளில் கொரோனாக் கட்டுப்பாடுகளைப் போட்ட தலைவர்களும், உயர் மட்ட அதிகாரிகளுமே அவைகளை மீறிய பல செய்திகள் வெளிவந்தன. அந்த வரிசையில் சேர்ந்துகொள்கிறார் நோர்வேயின் பிரதமர் எர்னா சூல்பெர்க். பத்துப் பேர்களுக்கு மேல் சந்திக்கலாகாது என்ற கட்டுப்பாட்டை மீறியதாக ஒப்புக்கொண்டிருக்கிறார் அவர்.
கடந்த குளிர்கால விடுமுறைக் காலத்தில் தனது 60 வயதைக் கொண்டாடிய அவர் இரண்டு தடவைகள் அடுத்தடுத்து, பத்துப் பேருக்கு அதிகமானவர்களுடன் உணவகத்தில் ஒன்று கூடியதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். ‘நாட்டின் நிலைமை கவலைக்கிடமாக இருந்த சமயத்தில், கட்டுப்பாடுகள் பற்றித் தெரிந்திருந்தும் தான் அதை மீறியது கண்டிப்புக்குரியது,’ என்று ஒப்புக்கொண்டு அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.
எர்னா சூல்பெர்கின் ஒப்புதலின் பின்னர் நோர்வே பொலீசார் அவர் தனது நடத்தையில் ஏதாவது தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்திருக்கிறாரா என்று அறிந்துகொள்ள ஆராய்வொன்றைத் தொடங்கியிருப்பதாக அறிவிக்கிறார்கள்.
நீண்டகாலமாகக் கடுமையான கொரோனாக் கட்டுப்பாடுகளை நோர்வே அதிகாரிகள் வெவ்வேறு நகரப் பகுதிகளில், வெவ்வேறு சமயங்களில் அறிவித்து வருகிறார்கள். அவைகளைப் புரிந்துகொள்வது கடினம், அவை அடிக்கடி மாறிக்கொண்டிருக்கின்றன, அனாவசியமாகக் கட்டுப்பாடுகள் நீட்டப்படுகின்றன போன்ற பல குற்றச்சாட்டுக்கள் நோர்வேயில் எழுந்திருக்கின்றன. அதே சமயத்தில் நாட்டின் முக்கிய பொறுப்பிலிருப்பவர் அதை மீறியதை அறிந்து மக்கள் கோபமடைந்திருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்