உலகின் மிகவும் பொருளாதாரப் பலன் கொண்ட ஆரம்கோவின் இலாபத்தில் 50 % விகித வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
சுமார் 2 திரில்லியன் டொலர்கள் பெறுமதியான சவூதி அரேபியாவின் எரிநெய் நிறுவனம் ஆரம்கோ உலகின் மிகப் பெறுமதி வாய்ந்த நிறுவனமாகக் கருதப்படுகிறது. 2020 இல் அதன் இலாபமானது 50 விகிதத்தால் வீழ்ச்சியடைந்து சுமார் 49 பில்லியன் டொலர்களாகியது என்று அறிவிக்கப்பட்டது.
சவூதிய அரசு அராம்கோ நிறுவனத்தின் பங்குகள் முழுவதையும் தன்னிடமே வைத்திருந்தது. சமீபத்தில் அதன் 98 % ஐத் தன்னிடம் வைத்துக்கொண்டு மிகுதியை சர்வதேசப் பங்குச் சந்தையில் விற்றது. எனவே அதன் சுமார் காலாண்டு இலாபத்தைப் பங்குதாரர்களுக்குப் பிரித்துக் கொடுப்பதாக உறுதியளித்திருந்தது. இலாபத்தில் பெரும் வீழ்ச்சியடைந்திருப்பினும் உறுதியளித்தப்படி எதிர்பார்க்கப்பட்ட இலாபத்தின் பகுதியைப் பிரித்தளிப்பதாக அராம்கோ தெரிவிக்கிறது.
சமீப வருடங்களாக எரிநெய் விலையானது சர்வதேசச் சந்தையில் வீழ்ச்சியடைந்திருப்பதும், கொரோனாத் தொற்றுக்களால் சர்வதேச வர்த்தகம், பொருளாதாரம் போன்றவை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதுமே இவ்வீழ்ச்சிக்குக் காரணமென்று குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்