உளவுபார்த்ததாக சீனா கைது செய்திருக்கும் கனடாக்காரரின் வழக்கைப் பார்க்க வெளிநாட்டு ராஜதந்திரிக்கள் அனுமதிக்கப்படவில்லை.
சுமார் இரண்டு வருடங்களாகச் சீனாவால் உளவுபார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இரண்டு கனடியர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான மைக்கல் வழக்கு பீஜிங்கில் நடந்தபோது பார்வையாளராக இருப்பதற்குக் சீனாவின் கனடியத் தூதர் அனுமதி மறுக்கப்பட்டார். அதேபோலவே சுமார் 26 நாடுகளின் ராஜதந்திரிகளும் நீதிமன்றத்தினுள் அனுமதிக்கப்படவில்லை.
மைக்கல் ஸ்பாவர், மைக்கல் கொவ்ரிக் ஆகிய இரண்டு கனடியரும் 2018 இன் கடைசியில் கைது செய்யப்பட்டார்கள். உளவுக்குற்றங்கள் சாட்டப்பட்ட அவர்களிருவரையும் காவலில் வைத்திருக்கும் சீனா அவர்கள் தமது சீன வழக்கறிஞர்களைச் சந்திக்க மிகவும் அரிதாகவே அனுமதிக்கப்படுகிறார்கள்.
மைக்கல் ஸ்பாவர் கனடா, சீனா, வட கொரியா ஆகிய நாடுகளிடையே பயணம் செய்துவரும் ஒரு நிறுவன அதிபராகும். அவரை வெள்ளியன்று சீனா நீதிமன்றத்தில் விசாரணைக்காக நிறுத்தியது. கறுப்புக் கண்ணாடியாலான வாகனத்தில் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்ட அவரை எவரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. வழக்கு மண்டபத்தினுள்ளும் வெளிநாட்டு ராஜதந்திரிகளெவரும் அனுமதிக்கப்படவில்லை.
மாஜி ராஜதந்திரியான மைக்கல் கொவ்ரி திங்களன்று வழக்குக்குக் கொண்டுவரப்பட்டபோதும் சீனா அதையே செய்ததால் கனடிய அரசு அதுபற்றிக் கடும் கோபங்கொண்டுள்ளது. “சீனாவின் பாதுகாப்புக்காகவே அவ்வழக்குகளைப் பார்க்க வெளிநாட்டினர் அனுமதிக்கப்படவில்லை,” என்று சீனா குறிப்பிட்டிருக்கிறது.
அந்தக் கனடியரிருவரையும் கைது செய்யக் காரணம் சீன நிறுவனமான ஹுவாவேயின் பொருளாதார நிர்வாகியை அமெரிக்காவின் கோரிக்கைக்கு இணங்க சீனா கைதுசெய்து வீட்டுக் காவலில் வைத்திருப்பதே என்று கனடா குற்றஞ்சாட்டுகிறது. அவையிரண்டுக்கும் சம்பந்தமில்லையென்று சீனா குறிப்பிட்டாலும் கனடா அதைச் செய்ததை அடுத்த நாட்களிலேயே தான் கனடியர்களைச் சீனா கைது செய்தது.
ஹுவாவேய் நிறுவன அதிபரின் மகளும், நிறுவனத்தின் உயர் நிர்வாகியுமான மென் வன்சூ அமெரிக்காவில் பொருளாதார மோசடிகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டு அவரைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி கோரியிருக்கிறது. அதன் காரணமாகவே கனடா அவரை வீட்டுக் காவலில் வைத்திருக்கிறது. அமெரிக்காவுக்குத் தன்னை அனுப்பலாகாது என்று மென் வன்சூ போராடி வருகிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்