தடுப்பு மருந்து ஏற்றுமதியைத் தற்காலிகமாகத் தடை செய்தது இந்தியா.
சமீப காலமாக உலக நாடுகளுக்கெல்லாம் நன்கொடையாகவும், விற்பனைக்காகவும் அஸ்ரா செனகா தடுப்பு மருந்துகளை அனுப்பிக்கொண்டிருந்த இந்தியாவும் அமெரிக்கா, ஐரோப்பா போன்று தனது தடுப்பு மருந்துகள் வெளியே போவதைத் தடை செய்திருக்கிறதாக அறிவிக்கப்படுகிறது.
சமீப நாட்களில் வேகமாகப் பரவி வரும் கொரோனாத் தொற்றுக்கள் இந்திய அரசை சஞ்சலத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. அத்துடன் மேற்கு இந்தியப் பிராந்தியத்தில் ஒரு திரிபடைந்த தொற்றும் பரவிவருவதாக அறிவிக்கப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்துத் தயாரிப்பாளரான செரும் இன்ஸ்டிடியூட்டை நம்பியே உலக ஆரோக்கிய அமைப்பின் கோவக்ஸ் திட்டம் ஏழை நாடுகளுக்குத் தடுப்பு மருந்துகளை வினியோக்கவிருக்கிறது. அத்திட்டம் மூலமாக இதுவரை 17.7 மில்லியன் அஸ்ரா செனகா தடுப்பு மருந்துகள் வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் ஏற்றுமதித் தடை அத்திட்டத்தையும் இடைமறிக்கிறது. உலகத் தேவைக்கான 60 % தடுப்பு மருந்துகள் இந்தியாவிலிருந்தே வரவேண்டும்.
“தற்போதய நிலைமையில் இந்திய அரசு துணிந்து மற்றைய நாடுகளுக்குக் கொடுப்பதை முன்னிறுத்தத் தயாராக இல்லை. இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்குத் தடுப்பு மருந்து கொடுப்பதே முக்கியமானது,” என்று இந்திய அரசின் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஏப்ரல் முதலாம் திகதிமுதல் இந்தியாவின் + 45 வயதினருக்குத் தடுப்பு மருந்து கொடுக்கு முடிவை இந்தியா எடுத்திருக்கிறது. இதுவரை சுமார் 45 மில்லியன் பேருக்கு இந்தியாவில் ஒரு தடுப்பூசியாவது கொடுக்கப்பட்டிருக்கிறது. பலவீனர், முக்கியமானவர்கள் என்ற அடிப்படையில் 250 மில்லியன் பேருக்கு ஜூலை மாதத்தினுள் தடுப்பு மருந்துகளைக் கொடுக்கவேண்டுமென்பது இந்தியாவின் குறியாக இருக்கிறது.
ஒரு மில்லியன் பேருக்கு யார் அதிகமானவர்களுக்குத் தடுப்பு மருந்து கொடுத்திருக்கிறார்கள் என்று கவனித்தால் கேரள மாநிலமே முன்னிலையிலிருக்கிறது. அதையடுத்து கர்நாடகா, டெல்லி, மத்திய பிரதேசம், மஹாராஷ்ரா தொடர்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்