இந்தோனேசியாவின் மக்கஸார் நகரக் கத்தோலிக்க தேவாலயத்தில் இரண்டு மனிதக் குண்டுகள் வெடிப்பு.
வரவிருக்கும் பாஸ்கு பண்டிகையை ஒட்டிய புனித வாரத்தின் முதல் நாளான இன்று இந்தோனேசியாவின் கத்தோலிக்க தேவாலயமொன்றுக்கு வெளியே இரண்டு பேர் தங்களில் பொருத்தியிருந்த குண்டுகளை வெடித்திருக்கிறார்கள்.
சுலாவேசி தீவிலிருக்கும் கத்தோலிக்க தேவாலயத்தில் நடந்த இந்தச் சம்பவத்தின்போது பூசை நடந்து முடியும் நேரமாக இருந்ததால் பெரும்பாலானோர் தேவாலயத்துக்கு உள்ளேயே இருந்தார்கள். குண்டு வெடிப்பினால் 14 பேர் காயமடைந்திருப்பதாகத் தெரிகிறது. குண்டு வைத்தவர்களிலொருவன் மோட்டார் சைக்கிளில் தேவாலயத்துக்குள் நுழைய முற்பட்டபோது வாசலிலிருந்த காவலாளியால் தடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்தப் பகுதியில் ஜனவரி மாதம் இந்தோனேசியாவின் பொலீஸ் தீவிரவாதிகளைத் தேடி வேட்டை நடாத்தியது. அச்சமயம் இன்னொரு தேவாலயத்தில் 2019 இல் குண்டுவைத்து சுமார் 20 பேரைக் கொன்றவர்களின் இயக்கத்தினர் இருவரைச் சுட்டுக் கொன்றதாக அறிவித்தது. அதேபோன்ற தீவிரவாத இயக்கங்கள் இன்றைய குண்டு வெடிப்பிலும் ஈடுபட்டிருக்கலாம் என்று பொலீசார் கருதுகிறார்கள். சாள்ஸ் ஜெ. போமன்