தென்சீனக்கடற் பிராந்தியத்தில் பிலிப்பைன்ஸின் கடல் எல்லைக்குள் சீனா அத்து மீறியிருப்பதாகக் குற்றச்சாட்டு.
தனது கடற்பிராந்தியத்தினுள்ளிருக்கும் rev என்று குறிப்பிடப்படும் நீருக்குக் கீழிருக்கும் கற்பாறைகள் சிலவற்றை ஒட்டிச் சீனா தனது கடற்படைக் கப்பல்களைக் கொண்டுவந்து மார்ச் ஏழாம் திகதி முதல் நிறுத்தியிருப்பதாகப் பிலிப்பைன்ஸ் குற்றஞ்சாட்டுகிறது. சீனாவோ அது தனது “ஒன்பது கோட்டு எல்லைக்கு” உள்ளே இருப்பதாகக் குறிப்பிடுகிறது.
1947 இல் சீனா தனது உரிமைக்கு உட்பட்ட கடற்பிரதேசமாக பதினொரு கோடுகளால் உண்டாக்கப்பட்ட ஒரு எல்லையைத் தென்சீனக் கடற்பகுதியில் ஸ்தாபித்துக்கொண்டது. அது பின்னர் ஒன்பது புள்ளிகளாகக் குறைக்கப்பட்டாலும், சீனாவின் அந்த எல்லை உரிமை கோரல் பக்கத்து நாடுகளினால் அங்கீகரிக்கப்படவில்லை.
சீனாவின் கோரிக்கையைச் ஐ.நா-வின் சர்வதேச கடல் எல்லைகள் பற்றிய ஒப்பந்தமும் ஏற்றுக்கொள்ளவில்லை. இது 2016 இல் சர்வதேச நீதிமன்றத்தாலும் தீர்ப்பளிக்கப்பட்டது. சீனாவைப் பொறுத்தவரை அக்கடற்பிராந்தியத்தின் சுமார் 90 % தனக்குரிமையானதென்கிறது. இந்தோனேசியா, வியட்நாம், மலேசியா, புரூனே, பிலிப்பைன்ஸ், தாய்வான் ஆகியவை அதைக் கடுமையாக எதிர்க்கின்றன.
சீனா தற்போது பிலிப்பைன்ஸ் தன்னுடையதாகக் குறிப்பிடும் பகுதியில் கடற்படைக் கப்பல்களை நிறுத்தியிருப்பதை தனது நாட்டின் எல்லைகளை மீறும் ஒரு செயலாகக் கருதுவதாகக் குறிப்பிடுகிறார் பிலிப்பைன்ஸின் ஜனாதிபதி டுவார்டே.
மீன் பிடிக்கும் கப்பல்கள் போலத் தோற்றமளிக்கும் சுமார் 220 கப்பல்கள் Whitsun Reef பிலிப்பைன்ஸ் அரசு வெளியிட்டிருக்கும் படங்களில் காணமுடிகிறது. சீனாவோ “மீன்பிடிக்கப்பல்களான அவை பெரும் காற்றால் தொடர்ந்து பயணிக்க முடியாமல் அங்கே நிறுத்தப்பட்டிருக்கின்றன,” என்கிறது. அவை மீன்பிடிக் கப்பல்கள் போலத் தோற்றமளிப்பினும் உண்மையிலேயே சீனாவின் கடற்படைக் கப்பல்களே என்று குறிப்பிடுகிறது பிலிப்பைன்ஸ்.
சாள்ஸ் ஜெ. போமன்