சுற்றுலாப் பயணங்களுக்காக நாட்டைத் திறக்கலாமா என்று கிரீஸின் ரோடோஸ் தீவில் ஒரு பரிசோதனை நடக்கப்போகிறது.
இலைதுளிர்காலம் ஐரோப்பாவின் தெற்கை வெம்மையாக்கிக்கொண்டிருக்கிறது. மேலும் ஓரிரு மாதங்களில் கோடை விடுமுறைகளும் ஆரம்பிக்கவிருக்கும்போது சுற்றுலாவுக்காக ஐரோப்பிய நாடுகள் சிலவற்றைத் திறப்பது பற்றிப் புதுப் புது ஆலோசனைகள் மலர்ந்துகொண்டிருக்கின்றன. கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின், கிரவேஷியா போன்ற நாடுகளுக்கு சுற்றுலாப் பயண வருமானம் அத்தியாவசியமானது.
கடந்த வருட இறுதியில் எதிர்பார்க்கப்பட்டது போல ஐரோப்பிய நாடுகளின் பெரும்பாலானோர் இக்கோடை ஆரம்பிக்கும் முன்னர் தடுப்பூசி பெற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்ற நிலைமையே தற்போது நிலவுகிறது. எனவே தடுப்பூசி போடாதவர்களையும் அனுமதிக்கக்கூடிய சுற்றுலாப் பயணங்களை எப்படி இயக்கலாமென்ற பரிசோதனையில் இறங்கியிருக்கிறது கிரீஸ். நெதர்லாந்தும் இணைந்திருக்கும் அத்திட்டம் குறிப்பிட்ட வாசஸ்தலங்களுக்குச் சுற்றுலாக்களை ஒழுங்குசெய்யும் விமான நிறுவனங்களால் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இதற்காக 187 நெதர்லாந்துச் சுற்றுலாப்பயணிகள் ரோடோஸ் தீவிலிருக்கும் “சகல வசதிகளையும் கொண்ட” ஹோட்டல் ஒன்றுக்கு ஏப்ரல் 12 ம் திகதி பறக்கவிருக்கிறார்கள். Hotel Mitsis Grand Beach என்ற பரந்த கடற்கரையைக் கொண்ட வாசஸ்தலத்தில் அவர்கள் தங்குவார்கள்.
கொரோனாத் தடுப்பூசி எடுத்திராத அவர்கள் பயணத்துக்கு முன்னர் பரிசோதிக்கப்படுவார்கள். திரும்பி வந்ததும் தனிமைப்படுத்தப்படுவார்கள். ரோடோஸில் தங்கும் எட்டு நாட்களுக்கும் வாசஸ்தலத்திற்கு வெளியே போக அவர்களுக்கு அனுமதியில்லை. ஹோட்டலின் ஊழியர்களும் கொரோனாத் தொற்றுக்காகப் பரிசோதிக்கப்படுவார்கள்.
கிரீஸிலும், நெதர்லாந்திலும் தற்போது கொரோனாத் தொற்றுக்கள் அதிகமாக இருப்பதால் நாடெங்கும் கடும் முடக்கங்கள் அமுல்படுத்தப்பட்டிருக்கின்றன. நெதர்லாந்து தனது மக்களை மே 15 வரை அனாவசியமான பயணங்களில் ஈடுபடவேண்டாமென்று கேட்டுக்கொள்கிறது.
ரோடோஸ் தீவில் நடக்கவிருக்கும் இந்தப் பரிசோதனைக்கு அடுத்தப்படியாக ஹோட்டலுக்கு வெளியே நகருக்குப் போக அனுமதிக்கும் பயணமொன்றைப் பற்றிய திட்டங்களிலும் சுற்றுலா நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. கொரோனாத் தொற்றுக்களால் பாதிக்கப்படாத பயணங்களைப் பாதுகாப்புடன் ஏற்படுத்த முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
கிரீஸ் தனது நாட்டுக்குள் சுதந்திரமாகச் சுற்றுலாப் பயணம் செய்ய இஸ்ராயேல் பயணிகளையும் பிரிட்டர்களையும் வரவேற்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்