ஆஸ்ரேலியர்களாக இருப்பினும் இந்தியாவுக்குப் போய்த் திரும்பினால் கடும் தட்டம் என்று சட்டமியற்றியது ஆஸ்ரேலியா.
இந்தியாவில் இரட்டைத் திரிபடைந்த கொரோனாக் கிருமிகளால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான சுகவீனமடைகிறார்கள், அக்கிருமியின் தொற்றுவேகம் மிக அதிகம் ஆகிய காரணங்களால் அமெரிக்கா உட்பட்ட உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்குக் கதவை மூடிவிட்டன. ஆஸ்ரேலியா மேலுமொரு படி போய் இந்தியாவில் 14 நாட்களுக்குள் நுழைந்தவரானால் அந்த நபர் ஆஸ்ரேலியராக இருப்பினும் தனது நாட்டுக்குள் நுழைந்தால் கடும் தண்டனை என்று பாராளுமன்றத்தில் முடிவெடுத்திருக்கிறது.
சிங்கப்பூர் தனது நாட்டில் நீண்டகாலங்களாக வாழ்ந்திருப்பினும் பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், சிறீலங்கா ஆகிய நாடுகளில் கடந்த இரண்டு வாரங்களுக்குள் விஜயம் செய்தவர்கள் எவரையும் உள்ளே விடமாட்டேன் என்று கட்டுப்பாடு போட்டது.
ஆஸ்ரேலியாவோ உலகில் எவரும் செய்யாத நடவடிக்கையாக ஆஸ்ரேலியக் குடிமக்களாக இருப்பினும் அவர்கள் இந்தியாவுக்குப் போய்த் திரும்பினால் அது தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவித்தது. ஏற்கனவே செவ்வாயன்று இந்தியாவுடனான விமானங்களை நிறுத்தியதால் ஏற்கனவே இந்தியாவில் 9,000 ஆஸ்ரேலியா – திரும்பிகள் மாட்டுப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 650 பேர் பலவீனமான நிலையிலுள்ளனரென்று தெரிவிக்கப்படுகிறது.
எவராவது வேறு வழிகளில் ஆஸ்ரேலியாவுக்குத் திரும்பினால் அவர்களுக்குத் தண்டம் சுமார் 66,000 ஆஸ்ரேலிய டொலர்கள். அவர்களை ஐந்து வருடம் வரை சிறையிடவும் முடியும். மே 03 திங்களன்று முதல் அமுலாகவிருக்கும் அந்தச் சட்டம் முதல் கட்டமாகப் பதினாலு நாட்களுக்கு அமுலில் இருக்கும்.
“இந்தியாவின் நிலைமை படு மோசமாக இருக்கிறது. நாங்கள் எங்கள் மக்கள் ஆரோக்கியச் சேவையினருடன் சேர்ந்து ஆலோசித்ததில் இந்தியாவிலிருந்து இப்போது வருபவர்களை முழுவதுமாக வெளியே அடைத்தால்தான் ஆஸ்ரேலியர்களுக்கு அது பாதுகாப்பாக இருக்கும்,” என்கிறார் நாட்டின் பொருளாதார அமைச்சர் ஜோஷ் பிரைடன்பெர்க்.
கொவிட் 19 க்கு எதிராகக் கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகளை ஆஸ்ரேலிய எல்லையிலும் நாட்டின் மாநில எல்லைகளிலும் விதிந்திருந்த ஆஸ்ரேலியாவில் தற்போது சமூகத் தொற்றுக்கள் இல்லாமலிருக்கிறது. ஆஸ்ரேலிய மருத்துவ சேவையின் நிலைமையைக் கவனத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக ஆஸ்ரேலிய அரசு தெரிவிக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்