சிறாரின் பாலியல் படங்களைப் பரிமாறி வந்த இணையத்தளக் குழுவொன்றை ஆறு நாடுகளின் பொலீசார் சேர்ந்து பிடித்தனர்.
எம்மால் பாவிக்கப்படும் இணையத்தளத்தைப் போலன்றி மறைவாகச் சிலரால் மட்டுமே காணக்கூடியதாக இருக்கும் டார்க் நெட் என்று குறிப்பிடப்படும் இணையத்தளத்தில் இயங்கிவந்த சிறுபிள்ளைகளின் ஆபாசப் படங்களைப் பரிமாறிவருபவர்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இதில் ஜேர்மனியப் பொலீசாரின் வேண்டுதலுக்கு இணங்க ஆறு நாடுகளின் பொலீசார் பங்குபற்றினார்கள்.
வயதுக்கு வராதவர்களைத் தங்கள் பாலியல் இச்சைக்கு வெவ்வேறு விதமாகப் பயன்படுத்தும் இக்குழுவினர்கள் தங்களை “போய்ஸ்டவுன்” என்று பெயரிட்டிருந்தார்கள். 2019 முதல் இத்தளத்தில் இயங்கிவந்த, இவர்களின் எண்ணிக்கை 400,000 க்கும் அதிகமாக இருந்ததாகத் தெரிகிறது. குறிப்பிட்ட மறைவான இணையத் தளத்தில் இவர்கள் பாலர்களின் பல்லாயிரக்கணக்கான ஆபாசப்படங்களைத் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டிருந்ததைக் கைப்பற்றினார்கள். இத்தளத்தின் மையம் மோல்டாவியாவில் இருந்தது. இத்தளத்தின் தொடர்புகளை வைத்து இதேபோன்று செயற்பட்டுவந்த வேறு சில தளங்களையும் பொலீசார் கண்டுபிடித்து மூடினார்கள்.
சுமார் 40 – 64 வயதுக்கிடையிலான நான்கு ஜேர்மனியர்கள் இத்தளத்தின் முக்கிய புள்ளிகள் என்று கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். ஜேர்மனியைத் தவிர நெதர்லாந்து, அமெரிக்கா, கனடா, சுவீடன், ஆஸ்ரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பொலீசாரும் யூரோபோல் அமைப்புடன் ஒன்றிணைந்து இவ்விசாரணைகளில் செயற்பட்டிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்