சீனாவின் மக்கள் தொகை வளர்கிறது, ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டப்படி வேகமாக வளரவில்லை.
பத்து வருடங்களுக்கொரு தடவை நாடு முழுவதும் உள்ள மக்கள் தொகையைக் கணக்கெடுப்பது சீனாவின் வழக்கம். நாட்டை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அந்த விபரங்களை வைத்தே தனது திட்டங்களைப் பின்னுகிறது. அதே போன்று போடப்படும் சமூக, பொருளாதாரத் திட்டங்கள் மூலமாக எதிர்கால மக்கள் தொகை எப்படியாகுமென்பதையும் தனது குறிக்கு ஏற்ப மாற்றவும் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது. கடந்த வருடத்தில் நடாத்தப்பட்ட மக்கள் கணக்கெடுப்பு அதுவரை சீனா போட்டிருந்த எதிர்பார்ப்புக்களை எட்டாததால் அதைக் குறிப்பிட்ட நேரத்தில் வெளியிடத் தயங்கி வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் கணித்திருந்தன.
அக்கணிப்புக்கள் போலவே சீனாவின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும்படியாக நாட்டின் மக்கள் தொகை வளரவில்லையென்பதைச் செவ்வாயன்று சீனாவின் மக்கள் தொகை கணக்கீட்டு அமைப்பின் பேச்சாளர் நிங் ஜிஸே பத்திரிகையாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். வழக்கத்துக்கு மாறாக எந்த வருடம் என்று சொல்லாமல் “மிகவும் மெதுவாக அதிகரிக்கு எதிர்காலத்தில் சீனாவின் சனத்தொகை தனது உச்சத்தைத் தொடும். ஆனால், அது எந்த வருடம் என்பதைத் தெளிவாகக் கணிக்க முடியவில்லை,” என்றூ நிங் ஜிஸே தெரிவித்தார்.
ஓரளவு மக்கள் தொகை அதிகரித்து சீனா 2020 இல் 1.4 பில்லியன் மக்களைக் கொண்டிருந்தது. தொடர்ந்தும் உலகின் மக்கள் தொகை அதிகமான நாடாக இருக்கிறது சீனா. சமீப வருடங்களில் சீனர்கள் பிள்ளைப் பெறுதலைக் குறைத்து வருகிறார்கள் என்பதைத் தெளிவாகக் காண முடிகிறது. முதல் தடவையாக சீனாவின் ஒரு பெண் தனது வாழ்நாளில் பெற்றுக்கொள்ளும் பிள்ளையின் சராசரித் தொகை 1.3 பிள்ளையாக இருந்தது. அது ஓரிரு வருடங்களுக்கு முன்னர் 1.69 ஆக இருந்தது.
மக்களின் வயதுகளும், மொத்த சனத்தொகையில் அவைகளின் பங்கீடும் சீனாவுக்கு ஒரு பிரச்சினையாகி வருகிறது. குழந்தைப் பெறுதல் குறையும் அதே சமயம் 60 வயதுக்கு அதிகமானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது. நாட்டின் மொத்தச் சனத்தொகையில் 19 விகிதமானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாகும். ஏற்கனவே பிள்ளை பெறுதலைக் குறைத்துக்கொண்ட சீனர்கள் கொரோனாத் தொற்றுக்களால் உலகிலிருக்கும் நிலையின்மை காரணமாக மேலும் அதைக் குறைத்துக்கொண்டிருப்பதாக மக்கள் தொகைக் கணக்கீட்டு அதிகாரி தெரிவித்தார்.
ஒரு மாதத்துக்கு முதலே வெளியிடப்படவேண்டிய சீனாவின் மக்கள் தொகை தாமதமாவதையொட்டி, அதன் காரணம் மக்கள் தொகை சீனாவில் ஏற்கனவே குறைய ஆரம்பித்திருக்கிறது என்று ஊகிக்கப்பட்டது. ஆனால் வெளியிடப்பட்ட விபரங்களின்படி தொடர்ந்தும், மிக மெதுவாக அதிகரிக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்