கொரோனாத்தொற்றுப் பரவல் என்ற உரத்தின் வீர்யத்தால் இலாபங்களைக் கொட்டும் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள்.
தொற்றுநோய்க்காலத்தின் கட்டுப்பாடுகள் உலக மக்களில் பலரின் நடமாட்டத்தை வெவ்வேறு வகையில் குறைத்திருக்கின்றன. தொற்றுநோய்ப் பரவலுக்கு மனிதர்களின் முன்னர் இருந்துவந்த வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதனால் பெருமளவில் நாம் தொழில்நுட்பங்களால் எங்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்களை நாடிவருகிறோம். அத்துடன் பெரும்பாலும் வீடுகளுக்குள்ளேயே அடைந்து கிடப்பதால் தொழில்நுட்பங்களாலான கைக்கெட்டிய பொழுதுபோக்குகளில் எங்கள் நேரத்தைச் செலவழிக்கிறோம்.
மனித வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் இப்படியான மாறுதல்கள் உலகின் தொழில்நுட்பச் சேவை நிறுவனங்களுக்கு வருமானமாக அமைந்துவருகின்றன. அதனால் அல்பபேட், பேஸ்புக், மைக்ரோசொப்ட், அப்பிள், அமெஸான் ஆகிய நிறுவனங்களின் இலாபங்கள், வளர்ச்சி விண்ணைத் தொடுகின்றன. அவர்களின் பங்குகளின் மதிப்புப் பெருமளவில் அதிகரித்திருக்கின்றது.
Standard and Poors பங்குச் சந்தை அமைப்பிலிருக்கும் ஐநூறு நிறுவனங்களின் மொத்தமான மதிப்பில் நாலிலொரு பங்கை அல்பபேட், பேஸ்புக், மைக்ரோசொப்ட், அப்பிள், அமெஸான் ஆகிய ஐந்து நிறுவனங்கள் மட்டுமே கொண்டிருக்கின்றன. அவைகளின் மொத்தப் பெறுமதி தற்போது 8,000 பில்லியன் டொலர்களாகும்.
மேற்குறிப்பிட்ட ஐந்து நிறுவனங்களே அமெரிக்காவின் சமீபகால பங்குச் சந்தை உயர்வின் பெரும்பகுதிக்கும் காரணமாக இருக்கின்றன. கடந்த ஐந்து வருடங்களில் இந்த ஐந்து நிறுவனங்களின் மதிப்பு இரட்டையாக உயர்ந்திருக்கிறது. இவ்வருடத்தின் முதல் காலாண்டில் அப்பிள் நிறுவனம் 47 பில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்திருக்கிறது. இது கடந்த வருடம் இதே சமயத்துடன் ஒப்பிடும்போது 66 % அதிகமாகும். அமெஸான் நிறுவனம் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 450,000 பேரைப் புதியதாக வேலைக்கமர்த்தி தனது மொத்தத் தொழிலாளிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்