“பாலர்களுக்கும், பதின்ம வயதினருக்கும் தடுப்பூசி கொடுக்க முற்படாமல் வறிய நாடுகளுக்கு தடுப்பூசிகளைக் கொடுங்கள்!”
உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அட்னம் கப்ரியேசுஸ் இந்த வேண்டுகோளை உலகின் பணக்கார நாடுகளிடம் வைக்கிறார். “நாம் ஒரு ஒழுக்க நெறி வீழ்ச்சியைச் சந்தித்துக்கொண்டிருக்கிறோம் என்று ஜனவரியிலேயே குறிப்பிட்டேன். அது உண்மையாகிக்கொண்டிருக்கிறது. மிகக் குறைந்தளவு நாடுகள் தமது பணபலத்தால் தயாரிக்கப்பட்டவைகளில் பெரும்பாலான தடுப்பு மருந்துகளை வாங்கிப் பாவிக்கின்றன. அவைகள் தமது நாட்டின் பலவீனமற்ற மக்களுக்கும், பிள்ளைகளுக்கும் தடுப்பு மருந்துகளைக் கொடுக்க விளைகிறார்கள். வறிய நாடுகளுக்கு உங்களிடமிருக்கும் தடுப்பு மருந்தைத் தந்துவிடுங்கள். அவர்கள் தமது நாட்டின் பலவீனமானவர்களுக்குத் தடுப்பூசி போட முடியாமல் தவிக்கிறார்கள்,” என்று வேண்டிக்கொண்டார் கப்ரியேசுஸ்.
உலகின் மிகவும் ஏழை நாடுகளில் 29 இதுவரை பெற்றுக்கொண்ட தடுப்பு மருந்துகளின் தொகை மொத்தமாகத் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளில் 0.3 % தான்.
இந்தியாவில் இரண்டாவது தொற்று அலை படு மோசமான விளைவுகளை உண்டாக்கியிருப்பதாகக் குறிப்பிட்ட கப்ரியேசுஸ் அதனால் கடந்த வருடம் ஏற்பட்டதை விட அதிகளவு தொற்றுக்களையும், இறப்புக்களையும் இவ்வருடம் உலகம் கண்டு வருகிறது என்று குறிப்பிட்டார். இந்தியா மட்டுமன்றி சிறீலங்கா, நேபாளம், கம்போடியா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் எகிப்து ஆகிய நாடுகளிலும் மிக அதிகமானவர்கள் மருத்துவ சேவையை நாடவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்