கொரோனாத்தொற்றுக் காலத்தில் அமெரிக்க நகரங்களில் குழுக்களின் வன்முறையும், கொலைகளும் பெருமளவில் அதிகரித்திருக்கின்றன.
அமெரிக்காவைக் கொரோனாத் தொற்றுக்கள் பலமாக ஆக்கிரமித்திருந்த காலகட்டத்தில் பரவலாக நாடு முழுவதுமே குற்றவாளிக் குழுக்களின் வன்முறையும், கொலைகளும் அதிகரித்திருப்பதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. நியூயோர்க், சிக்காகோ உட்பட்ட அமெரிக்காவின் ஐந்து பெரிய நகரங்களிலும் கொலைகள் 30 – 60 விகிதத்தால் அதிகரித்திருக்கின்றன. இவ்வருடத்தின் முதல் காலாண்டிலும் அதற்கு முந்தைய வருடத்தின் முதல் காலாண்டைவிட அதிகமான வன்முறைகள் நிகழ்ந்திருக்கின்றன.
மினியாப்பொலிஸில் கடந்த வருடம் நடந்த துப்பாக்கிச் சூடுகளின் எண்ணிக்கை கடந்த பதினைந்து வருடங்களிலேயே மிக அதிகமானது. 1990 களுக்குப் பின்னர் கடந்த வருடமே அதிக கொலைகள் அங்கே நிகழ்ந்திருக்கின்றன. அமெரிக்காவின் 66 பொலீஸ் மாவட்டங்களில் 57 இல் கடந்த வருடம் நடந்த கொலைகளின் எண்ணிக்கை அதற்கு முந்தைய வருடங்களை விட அதிகமானதாகும்.
கொரோனாத் தொற்றுக்களினால் ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளால் நாட்டில் சமூகப் பிரச்சினைகள் அதிகமாகியதும், ஏற்கனவே பொருளாதாரத்தில் பலவீனமாக இருந்தவர்கள் மேலும் பலவீனமாகியிருப்பதும், அதே நேரத்தில் நாட்டில் பாவனையிலிருக்கும் ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதுமே இதற்கான காரணங்கள் என்று கூறப்படுகிறது. அத்துடன், கொரோனாத்தொற்றுக் காலத்தில் பொலீசாரின் வரவுசெலவுத் திட்டங்களில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களும், முதன்மைப்படுத்தல்களும் கூட காரணங்களாகியிருக்கவேண்டும் என்று கணிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்