போலந்தின் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கத்தில் தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது.
போலந்தின் பெல்சட்டோ நிலக்கரிச் சுரங்கத்தில் சனியன்று நடுப்பகலில் ஆரம்பித்த தீவிபத்தானது கடுமையாகப் பரவி வருகிறது. அதை அணைப்பதில் 14 தீப்படை விரர்கள் பங்குபற்றி வருகிறார்கள். எரிந்துகொண்டிருக்கும் இந்தச் சுரங்கம் போலந்தின் மிக அதிகமான பழுப்பு நிலக்கரியைக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து அவற்றை எரித்து மின்சாரம் உண்டாக்கும் இயந்திரத்துக்கு நெருப்புப் பரவவில்லை என்று குறிப்பிடப்படுகிறது. அத்துடன், இதுவரை எந்த மனித பாதிப்பும் தீவிபத்தினால் உண்டாகவில்லை. குறிப்பிட்ட சுரங்கத்தின் நிலக்கரியால் இயக்கப்படும் 14 இயந்திரங்களில் ஒன்று மட்டுமே தற்போது இயங்குவதாக அதை இயக்கும் போலந்தின் அரச திணைக்களம் குறிப்பிடுகிறது.
இந்தத் தீவிபத்துக்கு முதல் நாள் இதே நிறுவனத்தினால் இயக்கப்படும் இன்னொரு பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்தின் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தும்படி ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் போலந்துக்கு உத்தரவிட்டிருக்கிறது. போலந்தின் செக் குடியரசு எல்லையருகேயிருக்கும் அந்தச் சுரங்கத்தின் செயற்பாடுகள் எல்லைக்கடுத்த பகுதியில் செக் குடியரசின் நிலக்கீழ் நீரைப் பாழாக்குவதாலேயே அந்தத் தீர்ப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
போலந்து தனது நாட்டின் சக்தித் தேவைக்கு 67 % நிலக்கரியிலேயே தங்கியிருக்கிறது. அவற்றில் 17 % மிகவும் அதிகமாக சூழலைப் பாதிக்கும் பழுப்பு நிலக்கரி ஆகும். 25 % போலந்தின் சக்தி மட்டுமே சூழலைப் பாதிக்காத வளங்களால் எடுக்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒத்துக்கொள்ளப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறது போலந்து. ஏற்கனவே ஒன்றியத்தின் நாடுகளில் மிக அதிகளவில் நிலக்கரியில் தங்கியிருக்கும் நாடு போலந்து என்பதால் ஒன்றியம் போலந்தை சூழலுக்குப் பாதிப்பற்ற சக்திக்கு மாறும்படி கோரி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம் தனது சூழல் பாதிப்புகளை அதி வேகமாகக் குறைப்பதற்குப் போலந்து ஒரு தடைக்கலாக இருந்து வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்