அலோபதி மருத்துவத்தை இகழ்ந்ததாக யோகா குரு ராம்தேவ் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.
நவீன மருத்துவத்தை “முட்டாள் தனமான விஞ்ஞானம்” என்று பிரபல யோகா குரு ராம்தேவ் ஒரு வீடியோ செய்தியில் இகழ்ந்திருப்பதாகப் பொலீசில் குற்றம் பதியப்பட்டிருக்கிறது. இந்தியாவே தொற்றுவியாதியால் பாதிக்கப்பட்டுத் திணறிக்கொண்டிருக்கும்போது ராம்தேவ் தனது சொந்த வியாபாரத்துக்காக மருத்துவர்களையும், விஞ்ஞானத்தையும் இகழ்ந்திருக்கிறார் என்று டெல்லி மெடிகல் அசோசியேஷன் குற்றஞ்சாட்டியிருக்கிறது.
சமூகவலைத்தளங்களில் பரவிவரும் ராம்தேவின் வீடியோ ஒன்றில் “ராம்டெஸ்விர், பவிபுளோ போன்ற இந்திய மருத்துவ அனுமதி திணைக்களத்தால் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் மருந்துகள் கொவிட் 19 ஐ எதிர்ப்பதில் படு தோல்வியடைந்திருக்கின்றன. லட்சக்கணக்கானவர்கள் அந்த அலோபதி மருந்துகளைப் பாவித்தபின் இறந்துபோயிருக்கிறார்கள்,” என்று ராம்தேவ் குறிப்பிட்டிருப்பதாக அந்த மருத்துவர்கள் அமைப்புக் குற்றம் சாட்டுகிறது.
அவர்கள் மட்டுமன்றி அகில இந்திய மருத்துவர்கள் சங்கமும் (AIIMS) இந்திய அரசின் மத்திய சுகாதார அமைச்சு இதில் குறுக்கிட்டு ராம்தேவ் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று கோரியிருக்கிறது.
அந்தக் குற்றச்சாட்டுப் பற்றி பதஞ்சலி யோகாபீத் அமைப்பு “குறிப்பிட்ட அந்த குறுக்கப்பட்ட வீடியோ செய்தியில் ராம்தேவ் என்ன சொல்ல வருகிறார் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. நீண்ட உரையிலிருந்து அது பிரித்தெடுக்கப்பட்டிருக்கிறது,” என்று கருத்துத் தெரிவித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்