பாவிப்புக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பு மருந்துகளை டென்மார்க் மீண்டும் பாவிக்கிறது.
தமது நாட்டு மக்களின் பாவனைக்கு ஏற்ற அளவுக்கு பாதுகாப்பானவை அல்ல என்று ஒதுக்கிவைக்கப்பட்ட அஸ்ரா செனகா, ஜோன்சன்ஸ் நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளை மீண்டும் பாவனைக்குட்படுத்துகிறது டென்மார்க். ஆனால், அவைகளைப் பாவிக்க உடன்படுகிறவர்களுக்கு மட்டும் அவர்களுடைய மருத்துவர்களின் அனுமதியுடன் அந்தத் தடுப்பு மருந்துகளுக்காக விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்.
அஸ்ரா செனகா மற்றும் ஜோன்சன்ஸ் நிறுவனங்களின் தடுப்பு மருந்துகள் மிக அரிதாக மட்டும் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் பெரும்பாலும் அறியப்பட்டவையே. அதனால் அவைகளைப் பாவிப்புக்குப் பாதுகாப்பானவை அல்ல என்று தனது பொதுத் தடுப்பு மருந்துப் பாவனைக்குத் தொடர்ந்தும் டென்மார்க் பாவிக்கவில்லை. ஆனாலும் தற்போது தடுப்பு மருந்துகள் கொடுக்கப்படும் வேகத்தில் தமக்கான தடுப்பு மருந்து கிடைக்க அதிக காலமாகலாம் என்று யோசிக்கிறவர்கள் வேண்டுமானால் விண்ணப்பம் செய்து அவைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று டென்மார்க்கின் அரசு சமீபத்தில் முடிவெடுத்திருக்கிறது.
டென்மார்க் அரசின் முடிவானது விமர்சனங்களையும் உண்டாக்கியிருக்கிறது. நாட்டின் மக்கள் ஆரோக்கிய சேவையினரின் மருத்துவர்களில் ஒரு சாரார் அரசின் முடிவு தவறானது என்கிறார்கள். அதனால் அந்தத் தடுப்பு மருந்துகளுக்காக விண்ணப்பம் செய்திருக்கும் ஆயிரக்கணக்கானோர் தனித்தனியாகத் தமது மருத்துவருடன் கலந்தாலோசிக்க வேண்டும். அந்தக் கலந்தாலோசனை படமாக்கப்பட்டுக் கோப்புகளில் பாதுகாக்கப்படும்.
தடுப்பு மருந்து வரிசையில் கடைசியிருக்கும் ஆரோக்கியமான இளவயதினரே டென்மார்க்கின் மக்கள் ஆரோக்கிய சேவையினரால் ஒதுக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட தடுப்பு மருந்துகளைப் பெற விண்ணப்பத்திருப்பவர்களில் பெரும்பாலானவர்களாக இருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்