ஒப்பந்தமோ, பட்டயங்களோ எழுதப்படாவிட்டாலும் புத்தின் – ஜோ பைடன் சந்திப்பு வெற்றிகரமானதே என்கிறார்கள் ரஷ்யர்கள்.
ஜெனிவாவில் நேற்று, புதனன்று பிற்பகல் புத்தினும், ஜோ பைடனும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டார்கள். படிப்படியாக இறுகிப் பனியாக உறைந்துவிட்டதாக விபரிக்கப்பட்டுவரும் ரஷ்ய – அமெரிக்க உறவுகளில் மென்மை உண்டாகுமா என்பது மேற்கொண்டு உயர்மட்ட அதிகாரிகளிடையே நடக்கப்போகும் சந்திப்புக்களிலேயே தெரியவரும். ரஷ்யாவின் அரசியல் மட்டத்தில் அச்சந்திப்பு வெற்றிகரமானதே என்று குறிப்பிடப்படுகிறது.
“நான் மூன்று அல்லது நாலு வெற்றிகரமான விளைவுகளை அச்சந்திப்பில் காண்கிறேன்,” என்று ரஷ்யாவின் மேல்சபை சபாநாயகர் கொன்ஸ்டாந்தின் கொஸசேவ் தொலைபேசிப் பேட்டியொன்றில் தெரிவித்தார்.வெளியேற்றப்பட்ட இரண்டு பக்க ராஜதந்திரிகளும் மீண்டும் தமது உத்தியோகங்களுக்குப் போகிறார்கள், தொலைத்தொடர்பு, இணையத்தளங்கள் மூலமான தாக்குதல்கள், வடதுருவ பிராந்திய பாதுகாப்பு பற்றிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும், அணு ஆயுதங்கள் கட்டுப்பாடு செய்யப்படுவது பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடரும், ஆகியவையைக் கொஸசேவ் சுட்டிக் காட்டினார்.
“பரஸ்பர நம்பிக்கையே இரண்டு நாடுகளுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தும். நடந்த சந்திப்பின் மூலம் அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்குமிடையே நல்லெண்ணம் உருவாக்கப்பட்டிருக்கிறது,” என்று அவர் விளக்கினார்.
சந்திப்பின் பின்னர் இரண்டு தலைவர்களும் ஒன்றிணைந்து பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்ளமாட்டார்கள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இரு தலைவர்களின் சந்திப்புக்காகச் சுமார் ஐந்து மணித்தியாலங்கள் ஒதுக்கப்பட்டிருந்தும் அது நான்கு மணித்தியாலத்துக்கு முதலே முடிந்துவிட்டது.
“நான் எதற்கு வந்தேனோ அதைச் செய்துவிட்டேன். எனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினேன். பெரிய வாக்குவாதங்களெதுவும் எமக்குள் நடக்கவில்லை. கதைக்கவேண்டியவைகளையெல்லாம் நாம் இரண்டு மணி நேரத்துக்குள்ளேயே முடித்துவிட்டு, இனி வேறென்ன இருக்கிறது? என்று யோசிக்க வேண்டியிருந்தது,” என்று ஜோ பைடன் பின்னர் குறிப்பிட்டிருந்தார்.
புத்தின் ஒரு நீண்ட பத்திரிகையாளர் சந்திப்பில் சந்திப்பைப் பற்றிய தனது கருத்துக்களைத் தெரிவித்தார். வழக்கம்போலவே, “ஜனநாயகம் பேணப்படவில்லை, தொலைத்தொடர்பு, இணையத்தள மூலமான தாக்குதல்கள், உக்ரேனுடனான உரசல்கள்” போன்றவைகள் பற்றிய கேள்விகளுக்கு அலட்சியமான பாணியில் பதிலளித்தார்.
ரஷ்யாவின் முக்கிய பத்திரிகைகளும் நடந்த சந்திப்பைப் பற்றிப் பெரும்பாலும் வெற்றியாகவே குறிப்பிட்டு எழுதியிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்