அமெரிக்காவின் கத்தோலிக்கத் திருச்சபை கருக்கலைப்பை ஆதரிக்கும் அரசியல்வாதிகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்கிறது.
கருக்கலைப்பை ஆதரிக்கும் அரசியல்வாதிகளுக்கு தேவநற்கருணை கொடுக்கலாகாது என்ற திட்டம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனைக் குறிவைத்து எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. கருக்கலைக்கும் உரிமைக்குக் குரல்கொடுக்கும் இயக்கங்களுக்கு ஆதரவளிப்பவர் ஜோ பைடன். அதேசமயம், வெளிப்படையாகத் தன்னைக் கத்தோலிக்க சமயத்தவரென்று காட்டிக்கொள்ளும் அவர் வாரத்துக்கொருமுறை தேவாலயத்துக்குச் செல்லத் தவறுவதில்லை.
தனது அந்த மனிதாபிமானக் கோட்பாட்டுக்காக ஒரு பகுதிக் கத்தோலிக்கர்களால் கடுமையாக ஜோ பைடன் எதிர்க்கப்படுகிறார். வெள்ளியன்று அமெரிக்காவின் பேராயர்கள் மாநாட்டில் மிகப் பெரும்பான்மையான வாக்குகளால் எடுக்கப்பட்ட முடிவொன்றின்படி கருக்கலைப்பாதரவாளர்கள் ஆக இருக்கும் அரசியல்வாதிகள் தேவநற்கருணை பெறுவதற்குத் தடைக்கல்லு போடும் திட்டமொன்று தயாராகவிருக்கிறது. பேராயர்கள் குழுவொன்று சேர்ந்து அதற்கான ஒரு திட்டத்தை வகுக்கவிருக்கிறார்கள்.
ஏற்கனவே 2019 இல் ஜோ பைடன் ஒரு தடவை தேவநற்கருணை எடுக்கத் தேவாலயத்தில் முயன்றபோது அவருக்கு அதைக் கொடுக்க ஒரு பாதிரியார் மறுத்திருக்கிறார். அதே போன்று, தமது தேவாலயப் பிராந்தியத்துக்குள் பேராயர்கள் விரும்பினால் கருக்கலைப்பாதரவாளர்களுக்குத் தேவநற்கருணை கொடுப்பதை மறுக்கும் உரிமையை நிலைநாட்டும் திட்டமொன்றையே அமெரிக்காவின் கத்தோலிக்க திருச்சபையின் பழமைவாதிகள் கொண்டுவர விரும்புகிறார்கள்.
அமெரிக்காவின் உச்சநீதிமன்ற நீதிமன்றத்தில் பெரும்பாலானோரைப் பழமைவாத நீதிபதிகளாக்கிவிட்ட டொனால்ட் டிரம்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்று இதுவே. அதன் விளைவாக, ஏற்கனவே கருக்கலைப்பு வழக்கொன்றை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்