கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்ட இந்தியர்களில் மிகப்பெரும்பாலானோருக்கு அண்டிபயோடிக் மருந்துகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கொவிட் 19 ஆல் சிறிய அளவில், நடுத்தர அளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அண்டிபயோடிக்கா மருந்துகள் கொடுக்கலாகாது என்ற வரையறுப்பையும் மீறி இந்தியாவில் அக்கிருமியால் பாதிக்கப்பட்ட எல்லோருக்குமே அதைக் கொடுத்ததாகத் தெரிவதாக ஆராய்ச்சி சுட்டிக் காட்டுகிறது. கடந்த வருடம் இந்தியாவில் அண்டிபயோடிக்கா மருந்துகள் 216.4 மில்லியன்களால் அதிகரித்திருக்கின்றன என்பதே அதற்குச் சான்று என்கிறது மிசூரியிலிருக்கும் பார்ன்ஸ் – யூத மருத்துவசாலை.
கடந்த வருடத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட அண்டிபயோட்டிக்கா மருந்துகளின் தொகை 16.29 பில்லியன்களாகும். வயது வந்தவர்களுக்கு அவற்றைப் பாவித்தல் முறையே 2018 இல் 72.6 %, 2019 இல் 72.5 % 2020 இல் 76.8 % ஆல் அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது.
மருத்துவ உலகின் மிகப்பெரும் சவாலாக மாறியிருப்பது அண்டிபயோட்டிக்கா மருந்துகளுக்குப் பழகிவிட்ட கிருமிகளாகும். அவைக்குப் பழகிவிட்ட கிருமிகளால் சாதாரணமாக அந்த மருந்தால் குணப்படுத்தக்கூடிய வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையைச் சந்திப்பது அதிகரித்துக்கொண்டே போகிறது. “அண்டிபயோட்டிக்காவுக்குப் பழகிவிட்ட கிருமிகளின் பலம் வளர்வதற்கு எல்லையே இல்லை. அவைகள் எந்த நாடுகளுக்கும் எப்படியும் பரவலாம்,” என்கிறார் அந்த ஆராய்ச்சியில் பங்குபற்றிய மருத்துவர் சுமந் காந்திரா.
அமெரிக்கா, ஐரோப்பா, கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் கொரோனாத் தொற்றுக்கள் அதிகமாக இருந்த வருடமான 2020 உட்பட அண்டிபயோடிகா மருந்துகளின் பாவனை தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த நாடுகளில் அதன் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டு அரசுகள் மருந்துவ சேவையினருக்குத் தெளிவான வழிகாட்டுதல்களைக் கொடுப்பதுடன், கண்காணித்தும் வருகிறார்கள்.
இந்தியாவிலோ மருத்துவ சேவையின் 75 %, மற்றும் மருந்து விற்பனையின் 90 % விகிதம் தனியாரின் கைகளில் இருக்கிறது. அவை ஒழுங்கான முறையில் வரையறுக்கப்படாததால் அண்டிபயோடிக் மருந்துகளின் விற்பனை மிக அதிகமாகி வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்