பிரிட்டிஷ் கொலம்பியாவை வாட்டிய வெக்கை அலை அப்பிராந்தியத்தின் கடல்வாழ் உயிரினங்களையும் அழித்திருக்கிறது.
கடந்த வாரங்களில் கனடாவின் பகுதிகளைத் தாக்கிய கடும் வெம்மை அலை ஏற்படுத்திய பல விளைவுகள் சர்வதேச ரீதியில் கவனிக்கப்பட்டவை. அந்த அலையின் வாட்டல் குறைந்தபின் கவனிக்கப்பட்ட விடயங்களிலொன்று மேற்குக் கனடாவின் கரையோரங்களில் அதனால் அழிக்கப்பட்டிருக்கும் கடல்வாழ் உயிரினங்களாகும்.
கனடாவின் கல்வாழ் உயிரினங்களின் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருக்கும் ஒரு பில்லியனுக்கும் குறையாத மட்டிகளும் மற்றும் நீர்வாழ் பிராணிகளும் வெம்மை தாங்காமல் இறந்துபோயிருக்கின்றன. தான் வான்கூவர் கடற்கரைகளுக்குப் போயிருந்தபோது எண்ணமுடியாத அளவில் மட்டிகள் திறந்து உள்ளிருக்கும் உயிர்கள் இறந்து பெருமளவின் நாற்றமடித்ததாகக் குறிப்பிடுகிறார்கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர் கிறீஸ்தோபர் ஹார்லி.
மட்டிகள் குறைந்த அளவு வெப்ப நிலையில் நீண்டகாலம் சூரிய வெளிச்சத்தையும், வறண்ட காற்றையும் தாங்கும் என்றாலும் கூட நீண்ட நாட்களுக்குக் கடும் வெம்மையைத் தாங்கக்கூடியவையல்ல. அவைகள் நீரைத் துப்பரவு செய்வதிலும் ஈடுபடுவதால் அவைகளின் இறப்பு அப்பகுதி நீரின் தன்மையையும் மாற்றும் என்று விளக்குகிறார் அவர்.
காலநிலை மாற்றங்கள் கனடாவின் கடல்வாழ் உயிரினங்களிடையே எந்தவித பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சி செய்துவரும் குழுவினரில் ஒருவர் கிறிஸ்தோபர் ஹார்லி. வெப்ப அலை அப்பிராந்தியத்தின் கடல் நீரின் வெப்பநிலையை உயர்த்தியிருக்கிறது. அதன் விளைவாக கடல்மட்டத்துக்குக் கீழேயிருக்கும் தாவரவகைகள், அவைகளை நம்பி வாழும் உயிரிங்களிடையேயும் கடும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்