கொரோனாக்கட்டுப்பாடுகளை அகற்றுவதைத் தள்ளிப் போடும்படி போரிஸ் ஜோன்சனுக்குப் கடும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
சமீப வாரங்களில் பிரிட்டனில் கொரோனாத்தொற்றுக்கு உள்ளாகி வருபவர்களில் பெரும்பாலானோர் இளவயதினராகவே இருக்கிறார்கள். ஆனால், நாட்டில் இதுவரை கொரோனாத் தடுப்பூசிகளைப் பெற்றிராதவர்களில் அவர்களே அதிக அளவிலிருக்கிறார்கள். எனவே, அவர்களுக்குத் தடுப்பூசி கொடுத்து முடிக்கும்வரை திட்டமிடப்பட்டிருக்கும் கொரோனாக்கட்டுப்பாடுகளை அகற்றுதலைத் தள்ளிப்போடும்படி மருத்துவர்கள், விஞ்ஞானிகள், சமூக ஆர்வலர்கள் 4,000 பேர் கையெழுத்திட்ட வேண்டுகோளொன்று பிரதமர் போரிஸ் ஜோன்சனை நோக்கி விடப்பட்டிருக்கிறது.
“மக்கள் ஆரோக்கியம் பற்றிய விடயங்களில், முக்கியமாக இளவயதினரின் நல்லாரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் செயலாற்றவேண்டும். தற்போதிருக்கும் நிலைமையில் ஜூலை 19 ம் திகதியன்று கொரோனாக் கட்டுப்பாடுகளை முழுசாக நீக்குவதன் மூலம் அரசு ஒரு மோசமான பரிசோதனையை பொதுமக்கள் ஆரோக்கியத்தின் மீது நடத்துவதாக நாம் கருதுகிறோம்,” அந்த வேண்டுகோள்.
சுமார் பத்து விஞ்ஞானிகளின் சுட்டிக்காட்டுதலாக ஆரம்பித்த அந்த வேண்டுகோளின் பின்னால் சுமார் 4,000 பேர் இணைந்திருக்கிறார்கள்.
“நாட்டின் அரசாங்கம் வேண்டுமென்றே இளைய தலைமுறையினரிடையே மிகப் பெரும் கொரோனாப்பரவலுக்கு வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது. இது அநியாயமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர்களுக்குத் தடுப்பு மருந்துகளைக் கொடுத்துப் பாடசாலைகளில் பாதுகாக்காமல் பரிசோதனைக் விலங்குகளாக்குகிறது. கடந்த காலத்தில் இளவயதினர் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். அதையடுத்து இந்தப் பாரத்தையும் அவர்கள் சுமக்கவேண்டியதாகிறது. இதனால் அவர்களில் பலர் நீண்டகால வியாதிகளைச் சுமக்கவேண்டியிருக்கும்,” என்கிறார் தொற்றுவியாதி ஆராய்ச்சியாளர் தீப்தி குர்தசானி.
பிரிட்டிஷ் அரசின் விபரங்களின்படி ஏற்கனவே நாட்டின் 1.5 விகிதமானவர்கள் தொற்றுகளினால் நீண்டகாலச் சுகவீனங்களுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சுமார் 385,000 பேர் ஒரு வருடகாலம் வெவ்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அந்தப் பாதிப்புக்கள் அவர்களுடைய தினசரி வாழ்க்கைக் கடுமையாகப் பாதித்து வருவதாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
தற்சமயம் 33,000 இளவயதினர் நீண்டகாலக் கொரோனா வியாதிப் பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது.
அரசு தனது கொரோனாக் கட்டுப்பாட்டு நீக்கலைத் தள்ளிப்போடும்படி கேட்டுக்கொள்பவர்களை 60 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரிக்கிறார்கள். அவர்களில் சகல கட்சியினரும் இருக்கிறார்கள். ஏற்கனவே திட்டமிட்டபடி ஜூலை 19 ம் திகதி பிரிட்டனில் கொரோனாக் கட்டுப்பாடுகளை நீக்குவதா என்பது பற்றி 12ம் திகதி அறிவிக்கப்படும்.
சாள்ஸ் ஜெ. போமன்