மேற்கு ஐரோப்பாவின் வழியில் அமெரிக்காவும் பிள்ளைகளுக்காகப் பெற்றோருக்கு மாதாமாதம் உதவித்தொகை.
ஆறு முதல் பதினேழு வயதானவர்களுக்காகப் பெற்றோர்களுக்கு மாதாமாதம் 250 டொலர்கள், ஆறு வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்காக மாதாமாதம் 300 டொலர்கள் அமெரிக்க அரசு கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. ஜூலை 15 ம் திகதி முதல் கொடுக்க ஆரம்பிக்கப்பட்டிருக்கும் அந்த உதவித்தொகையை 90 விகிதமான அமெரிக்கப் பெற்றோர்கள் பெறுகிறார்கள்.
அமெரிக்கச் சரித்திரத்திலேயே முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த நகர்வின்படி வருடாவருடம் 75,000 டொலர்களுக்கு அதிகமான வருமானம் பெறும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கான உதவித்தொகை அவர்களின் வருமானம் அதிகரிப்பின் குறையும். 39 மில்லியன் குடும்பங்களின் 65 மில்லியன் பிள்ளைகளுக்கு இந்தத் உதவித்தொகை கொடுக்கப்படுவது மார்ச் மாதத்தில் ஜோ பைடன் அறிவித்த பொருளாதார மாற்றங்களில் ஒன்றாகும்.
பிள்ளைகளுள்ள குடும்பத்தினரின் வறுமையை 50 விகிதத்திலாவது இவ்வருடத்துக்குள் ஒழித்துக்கட்டவேண்டுமென்பது ஜோ பைடன் அரசின் குறிக்கோளாகும். இந்த உதவித்தொகையால் பிள்ளைகளின் ஆரோக்கியம், கல்வி போன்றவைக்கு உடனடி ஊட்டச்சத்துக் கிடைக்குமென்று அவதானிகள் குறிப்பிடுகிறார்கள்.
இவ்வருட இறுதிவரை பரீட்சார்த்தமாகக் கொடுக்கப்படவிருக்கும் பிள்ளைகளுக்கான உதவித்தொகையை நிரந்தரமாக்குவதே டெமொகிரடிக் கட்சியினரின் எண்ணமாகும். ரிபப்ளிகன் கட்சியினர், பழமைவாதக் குழுக்கள் இந்த மாற்றத்தை விரும்பவில்லை. இப்படியான உதவித்தொகை மக்களின் வேலைசெய்ய விரும்மும் ஆர்வத்தைக் குறைக்கும் என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள். செனட் சபையில் இதற்காக அவர்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த உதவித்தொகை பிள்ளைகளுக்காகக் கொடுக்கப்படுவதால் இதன் விளைவாகக் கல்யாணம் செய்துகொள்ளும் ஆர்வமும் குறைந்துவிடும் என்று பழமைவாதிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்