குவாந்தனாமோ முகாமிலிருந்த மொரோக்கோ குடிமகன் தனது நாட்டுக்கு அனுப்பப்பட்டார்.
ஐந்து வருடங்களுக்கு முன்னரே அமெரிக்க பாதுகாப்பு அமைச்சால் “குவாந்தனாமோ முகாமிலிருந்து விடுதலை செய்யப்படவேண்டியவர்” என்று அறிவிக்கப்பட்ட மொரோக்கோவைச் சேர்ந்த அப்துல் லதீப் நஸீர் தனது நாட்டுக்கு அனுப்பப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்ட மேலும் சிலரைப் போலவே அவர் மீதும் கடைசி வரை எந்த ஒரு குற்றமும் சாட்டப்படாமல் ஒபாமாவின் காலத்திலேயே விடுவிக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனாலும், டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதும் அது பற்றிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாமல் ஒத்திப்போடப்பட்டது.
தனது பதவிக்காலத்தில் அந்த முகாமை மூடிவிடுவதாக ஒபாமா அறிவித்திருந்தாலும் அதை அவரால் நிறைவேற்ற முடியாமல் ரிபப்ளிகன் கட்சியினர் தடைபோட்டுவிட்டார்கள். எனவே, அதேபோன்று உறுதியளித்து வெற்றியடையாமல் போவதைத் தவிர்க்க, ஜோ பைடன் அது மூடுவது எப்படி என்பதை ஆராய ஒரு குழுவினரை அமைத்துச் செயற்பட்டு வருகிறார்.
அவரது ஆட்சிக்காலத்தில் இதுவரை மேலும் சில கைதிகள் அங்கிருந்து விடுவிக்கப்பட முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மீதும் அமெரிக்க அரசால் எவ்வித குற்றங்களையும் சுமத்தி விசாரணைக்கு உட்படுத்த முடியவில்லை. விடுவிக்கப்பட்டவர்களை அந்தந்த நாட்டு அரசுகளுடன் தொடர்பு கொண்டு அவர்களை அங்கங்கு அனுப்புவது பற்றிய விபரங்கள் தெளிவுபடுத்தப்பட்ட பின்னரே அவர்கள் பற்றிய இறுதி முடிவு எடுக்கப்படும்.
மொரோக்கோ அரசு தனது குடிமகனை மீண்டும் பெற்றுக்கொள்வதில் அமெரிக்காவுடன் கூட்டுறவாக இருந்தது பற்றிப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க அரசுடன் சேர்ந்து அவர்கள் செய்ற்படுவதையும் அமெரிக்கா மெச்சியிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்