நாளின் ஐந்து பிரார்த்தனைச் சமயங்களிலும் வியாபார நிலையங்கள் திறக்கப்ப்பட்டிருக்கும் என்று சவூதி அரேபியா முடிவு செய்திருக்கிறது.
சவூதி அரேபியாவில் இளவரசன் முஹம்மது பின் சல்மானின் சமூக மாற்றங்களின் இன்னொரு மாற்றமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தினசரி இஸ்லாமியப் பிரார்த்தனைச் சமயங்களில் வியாபார தலங்கள் திறந்திருக்கவேண்டும் என்ற உத்தியோகபூர்வமான முடிவை நாட்டின் அரசு அறிவித்திருக்கிறது.
“நாட்டிலிருக்கும் நிறுவனங்களும், வியாபார தலங்களும் வியாபார நேரங்களில் திறந்திருக்கும். முக்கியமாக ஐந்து பிரார்த்தனை நேரங்களிலும் அவை திறந்திருக்க வேண்டும்,” என்கிறது சவூதி அரசின் அறிவிப்பு. அதற்குக் காரணமாக, “கொரோனாக் காலத்தில் தொற்றுக்களைத் தடுக்க மக்கள் குறிப்பிட்ட நேரங்களில், குறிப்பிட்ட இடங்களில் அதிகமாகக் கூடுவதைத் தடுக்கவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
2019ம் ஆண்டிலேயே கொண்டுவரப்பட்ட ஒரு சட்டத் தளர்த்தல் மூலம் “நாட்டின் நிறுவனங்கள், வியாபார தலங்கள் குறிப்பிட்ட ஒரு கட்டணம் செலுத்திவிட்டு 24 மணி நேரமும் திறந்திருக்கலாம்,” என்று குறிப்பிடப்பட்டது. ஆனாலும், ஒரு புனிதப் பசு என்று கருதப்படும் “பிரார்த்தனை நேரங்கள்” பற்றிய தெளிவெதுவும் இல்லாமலிருந்தது. அவ்விடயமே தற்போது தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
சூரிய அஸ்தமனத்தின் தருணம் இஸ்லாமிய நாள் ஆரம்பிக்கும் பஜ்ர் பிரார்த்தனை நேரம் இஸ்லாமிய நாடுகளில் மிகவும் புனிதமானதாகக் கருதப்பட்டு அந்தச் சமயத்தில் வியாபார இடங்கள் மூடப்படுவது அவசியமானதாக இருந்தது. மற்றைய நாலு பிரார்த்தனை நேரங்களில் வழக்கம் போல இயங்கினாலும் பஜ்ர் பிரார்த்தனை சமயத்தில் கட்டாயம் வேலைகளை நிறுத்தவேண்டுமென்றூ இஸ்லாமியர்களிடையே கருதப்பட்டது.
பிரார்த்தனை சமயத்தில் வியாபாரங்கள், நிறுவனங்கள் செயற்படாமலிருப்பது சவூதிய பொருளாதாரத்துக்கு வருடாவருடம் பத்துக்கு மேற்பட்ட பில்லியன் டொலர்கள் நட்டமாக இருப்பதாக நாட்டின் ஷுறா சட்டக் குழு சுட்டிக்காட்டியிருக்கிறது. கொரோனாக் கட்டுப்பாடுகள், எண்ணேய் விலை வீழ்ச்சி ஆகியவற்றால் ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் சவூதிய பொருளாதாரத்துக்கு மேலும் பாதிப்பு ஏற்படுத்து நடவடிக்கைகளை அகற்றுவது அவசியமென்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்