கிரீன்லாந்தில் ஒரே நாளில் 22 பில்லியன் தொன் உறைபனி கரைந்தது.
உறைபனிப் பிரதேசமான கிரீன்லாந்தில் இந்தக் கோடைகாலத்தில் ஏற்பட்டிருக்கும் வெப்ப அலை என்றுமில்லாத அளவு வேகமாக அங்குள்ள உறைபனியைக் கரையவைத்து வருகிறது. அதைக் கண்காணித்துவரும் டனிஷ் ஆராய்ச்சி நிலையத்தின் விபரங்களின்படி ஜூலை 28 புதனன்று மட்டும் 22 பில்லியன் தொன் நீண்டகால உறைபனி கரைந்து நீராகியதாகத் தெரிகிறது.
கிரீன்லாந்தின் நேர்லேரித் இனாத் விமான நிலையத்தையடுத்து வியாழனன்று 23.4 செல்சியஸ் வெப்பம் அளக்கப்பட்டது. அது அவ்விடத்தில் இதுவரை காலத்தில் காணப்படாத வெப்பமாகும். கிரீன்லாந்துப் பிராந்தியமெங்கும் வழக்கத்தைவிட 10 செல்சியஸ் அதிக வெப்பநிலை நிலவுவதாக அந்த ஆராய்ச்சி நிலையம் குறிப்பிடுகிறது.
ஏற்கனவே 2012 இலும், 2019 இலும் கிரீன்லாந்தில் வழக்கத்தைவிட அதிகமான உறைபனி கரைந்தது. புதனன்று கரைந்த 22 பில்லியன் தொன்னில் 12 பில்லியன் சமுத்திரங்களில் சேர 10 பில்லியன் தொன் அங்கிருக்கும் உறைபனியுடன் சேர்ந்து மீண்டும் உறைந்தது.
கடந்த சுமார் 20 வருடங்களாக கிரீன்லாந்தின் உறைபனிப் போர்வை வழக்கத்தை விட அதிகமான வேகத்தில் கரைந்து வருகிறது. அதே வேகத்தில் தொடர்ந்து அங்கிருக்கும் உறைபனி கரையுமானால் 2100 ம் ஆண்டளவில் உலகின் கடல்மட்டம் 10 – 18 சென்ரிமீற்றர் அதிகரிக்கும் என்று ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்