நாட்டின் பாதுகாப்புக் கருதி சீனா பிரபல கரோவாக்கே பாடல்கள் சிலவற்றுக்குத் தடை விதிக்கவிருக்கிறது.
உணவகங்கள், தவறணைகள், கேளிக்கை விடுதிகள் போன்ற பொழுதுபோக்கு தலங்களில் பிரபலமான பாடல்களை விருந்தினர்கள் ஒன்றுகூடிப் பாடி மகிழும் கரோவாக்கே சீனாவிலும் மிகவும் பிரபலமானது. சுமார் ஒரு லட்சம் பாடல்கள் கரோவாக்கே மையங்களில் பாடப்படுகின்றன. அவைகளில் “தேசிய பாதுகாப்புக்கு” எதிரானவை தடை செய்யப்படும் என்று சீன அரசு அறிவித்திருக்கிறது.
நாட்டின் பொருளாதார அமைச்சு வெளியிட்டிருக்கும் விபரங்களின்படி தேசிய ஒற்றுமையையும், பாதுகாப்புக்கும் எதிரானவை, சிறுபான்மையினரைத் தாழ்த்துபவை, குறிப்பிட்ட நபர்களை கேலிசெய்பவை, ஆராதனை செய்பவை, குற்றங்களை ஆராதனை செய்பவை போன்ற பாடல்கள் தடை செய்யப்படும். தடை செய்யப்பட்ட பாடல்கள் எவை என்ற விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
2019 ம் ஆண்டில் ஹொங்கொங் பிராந்தியத்தில் சீனாவின் ஆட்சிக்கு எதிராகச் சில பாடல்கள் வெளியாகிப் பிரபலமாகின. அவை ஹொங்கொங் தன்னைத்தானே ஆளவேண்டும் என்ற சுதந்திர வேட்கை கொண்டவர்களிடையே பரவலாகப் பாடப்பட்டன. இணையத்தளங்களிலும் அவை பரவியிருந்தன. குறிப்பிட்ட அந்தப் பாடல்கள் சீனாவால் தடை செய்யப்பட்டுவிட்டன.
புதியதாக வெளிவந்திருக்கும் கட்டுப்பாடுகள் ஒக்டோபர் மாதத்திலிருந்து அமுலுக்கு வரவிருக்கின்றன. பொழுதுபோக்கு மையங்கள் அதற்கு முன்னரே தடைசெய்யப்பட்ட பாடல்களைத் தமது தொகுப்பிலிருந்து அகற்றவேண்டும். அதன் பின்னர் புதிய பாடல்கள் சேர்க்கப்படும் பட்சத்தில் அரசின் கலாச்சார, பொழுதுபோக்குத் திணைக்களத்தின் தணிக்கையாளரிடம் அவை அனுப்பப்பட்ட பின்னரே பாவனைக்குச் சேர்த்துக்கொள்ளப்படலாம்.
சாள்ஸ் ஜெ. போமன்