சவூதி அரேபியாவின் லஞ்ச ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் 207 முக்கிய புள்ளிகளைக் கைது செய்தார்கள்.
ஜூன் 2017 இல் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசனாகிய முஹம்மது பின் சல்மான் எடுத்து வரும் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று நாட்டின் வளங்களைக் கைவசப்படுத்தும் உயர்மட்டப் புள்ளிகளை வளைத்துக் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு பகுதி சொத்துக்களைப் புடுங்குவதும், தண்டிப்பதுமாகும். அந்த வழியில் இவ்வார ஆரம்பத்தில் நாட்டின் திணைக்களங்களின் முக்கிய புள்ளிகள் 207 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக சவூதிய அரசு அறிவித்திருக்கிறது.
வழக்கம்போலவே கைது செய்யப்பட்டவர்களின் பெயர்கள் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை. நாட்டின் லஞ்ச ஊழல்கள் கண்காணிப்பு அமைப்பான நஸாஹாவின்(Nazaha) அதிகாரிகளால் அவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக மட்டும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நஸாஹா அமைப்பு இளவரசரின் நேரடியான கட்டுப்பாட்டுக்குக் கீழ் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
நஸாஹாவின் கண்காணிப்புக் குழு நாட்டின் பாதுகாப்பு, உள்ளூராட்சி, நீதி, வீட்டு வசதி, சூழல் பாதுகாப்பு, மக்கள் ஆரோக்கியம் உட்பட்ட பல அமைச்சுக்கள், திணைக்களங்களுக்கு 878 நேரடி விஜயங்கள் செய்ததாகவும் அவைகளில் 461 குற்றவாளிகள் காணப்பட்டதாகவும், அவர்களில் 207 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அரச செய்தி ஸ்தாபனம் தெரிவிக்கிறது. அவர்கள் மீதான சட்ட விசாரணைகள் முடிந்த பின்னர் அவர்கள் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்றும் அச்செய்தி குறிப்பிடுகிறது.
எதிர்காலத்தில் தான் சவூதி மன்னராவதற்கு இடையூறாக இருப்பவர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் எல்லோரையும் ஈவிரக்கமின்றி ஒதுக்கி வருகிறார் முஹம்மது பின் சல்மான். அவர் அதிகாரத்துக்கு வந்த பின்னர் அரச குடும்பத்தினர், பிரபலங்கள், அதி பணக்காரர்கள் 300 பேருக்கும் அதிகமாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இஸ்லாமிய போதகர்கள் பலர் கூட அவரால் கைது செய்யப்பட்டும், ஒதுக்கவும் பட்டிருக்கிறார்கள்.
எனவே லஞ்ச ஊழல் என்று குறிப்பிடப்பட்டாலும் கூட அவருக்கு எதிராக இயங்கக்கூடியவர்களே என்று கருதப்படுகிறவர்களே கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள் என்று அவரது விமர்சகர்களால் கணிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்