காபுல் இந்தியத் தூதுவராலய ஊழியர்களைப் பாதுகாப்பாக விமான நிலையம் வரை கூட்டிச் சென்று வழியனுப்பினார்கள் தலிபான்கள்.
காபுலை எவ்வித எதிர்ப்புமின்றித் தலிபான் இயக்கங்கள் கைப்பற்றியதையறிந்து எல்லோரைப் போலவே பதட்டமடைந்தவர்கள் இந்தியத் தூதுவராலய ஊழியர்களும் தான். நகரின் அதி பாதுகாப்பு வலயத்துக்குள்ளிருக்கும் அப்பகுதியையும் ஆப்கானிய இராணுவம் கைவிட்டுவிட்டது. தூதுவராலய ஊழியர்களும், மற்றைய இந்திய அமைப்புத் திட்டங்களில் பணியாற்றிய இந்தியர்கள் சிலரும் தூதுவராலயத்துக்குள் தஞ்சமடைந்திருந்தார்கள்.
பாகிஸ்தானைப் போலன்றி ஆப்கானிஸ்தானில் ஆட்சியிலிருந்த அரசை ஆதரித்தவர்கள் இந்தியர்கள். அதனால், அவர்களைத் தலிபான் இயக்கத்தினர் எதிரிகளாகக் கணிப்பார்களோ என்ற பயத்திலிருந்தார்கள் அவர்கள். ஒரு பகுதி இந்தியர்கள் அதனால் ஏற்கனவே ஆப்கானிஸ்தானிலிருந்து முன்னரே வெளியேற்றப்பட்டுவிட்டார்கள்.
மீதியிருந்தவர்களை, விமான நிலையத்துக்குக் கூட்டிச்செல்ல வாசலில் தலிபான் இயக்க வீரர்கள் ஆயுதபாணிகளாகக் காத்திருந்தார்கள். அவர்களை நியூ டெல்லிக்குக் கொண்டு செல்ல விமான நிலையத்தில் இந்திய இராணுவத்தின் விமானம் காத்திருந்தது. விமான நிலையம் அமெரிக்க இராணுவத்தின் பாதுகாப்பிலிருந்தது.
விமான நிலையத்துக்குக் கொண்டுசெல்ல வந்திருந்த வாகனங்களில் இந்தியர்கள் ஏறியதும் அவர்களை விமான நிலையம் வரையான ஐந்து கி.மீ தூரம் வரை கூட்டிச்சென்றார்கள் தலிபான் வீரர்கள். வழியெங்கும் நின்றிருந்த கூட்டத்தை அடிக்கடி தமது பாதுகாப்பு வாகனத்தை நிறுத்தி விரட்டியடித்தார்கள் தலிபான்கள். ஒரு தடவை பெரும் கூட்டமொன்றை விரட்ட அவர்கள் வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு செய்தார்கள்.
விமான நிலையத்துக்கு இந்தியர்கள் வந்ததும் அவர்களைப் பொறுப்பேற்று இந்திய விமானத்தில் ஏற்றினார்கள் அமெரிக்கர்கள். காபுல் வான்வெளி தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கிறது. அது உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டதும் காபுலில் காத்திருக்கும் மேலும் சில இந்தியர்களையும் நாட்டுக்குக் கொண்டுவருவதாக இந்தியா அறிவிக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்