காபுல் அரச ஒலிப்பதிவு மையத்திலிருந்த இசை உபகரணங்கள் உடைத்துச் சிதைக்கப்பட்டன.

முதல் தடவை தமது ஆட்சியில் நடந்தது போலத் தாம் நடக்கப்போவதில்லை என்று சர்வதேச ஊட்கங்களுக்கு அடிக்கடி பேட்டி கொடுத்தாலும், தலிபான் இயக்கத்தினர் அதேபோன்ற நடவடிக்கைகளில் மீண்டும் ஈடுபடுவதைக் காண முடிகிறது. அவைகளில் ஒன்றுதான் ஆப்கானிஸ்தான் அரசின் ஒலிபதிப்பு மையத்திலிருந்த இசைக் கருவிகள் உடைத்து நொறுக்கப்பட்டிருப்பதாகும்.

தலிபான் இயக்கத்தினர் காபுலைக் கைப்பற்றிய பின்னர் நாட்டில் இசைக்குத் தடை விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு, “இஸ்லாம் இசை ஒரு பாபகரமான நடத்தை என்கிறது. அச்செயலில் ஈடுபடும் மனிதர்களைத் தண்டிக்காமல், அவர்களுக்கு அதைப்பற்றிச் சொல்லித் திருத்தவே விரும்புகிறோம்,” என்று ஊடகத் தொடர்பாளர் ஸபியுல்லா முஜஹீத் குறிப்பிட்டிருந்தார்.

ஆப்கானிஸ்தானின் காபுலுக்கு வடக்கேயிருக்கும் பஞ்சீர் பிராந்தியத்தில் தலிபான்களுக்கு எதிரானவர்கள் தமது இராணுவத்தைத் திரட்டியிருந்தனர். தலிபான் அமைப்புக்களுக்கு எதிரான போரை நடத்தப்போவதாக அவர்களின் தலைவர்கள் அறைகூவியிருந்தனர்.

பஞ்சீர் பிராந்தியத்துக்குப் படையெடுத்துச் சென்ற தலிபான் இயக்கத்தினர் கடந்த ஒரு வாரமாக அங்கே அவர்களுடன் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மலைகளும், பள்ளத்தாக்குகளும் கொண்ட இயற்கையான அரணுள்ள அப்பகுதியிலிருந்து சார்பற்ற செய்திகள் கிடைப்பது அரிதாக இருந்தது. இரண்டு பகுதியினரும் எதிர்ச்சாராருக்குப் பெரும் அழிவு ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டு வந்தார்கள்.

கடந்த நாட்களில் அங்கே செயற்பட்டு வரும் மனிதாபிமான அமைப்புக்களின் மூலமாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. இரு பகுதியினரும் பெருமளவில் சேதங்களையும், இறப்புக்களையும் எதிர் நோக்கியிருப்பதாகத் தெரிகிறது.

அப்பகுதியைப் பெரும்பாலும் தலிபான் இயக்கத்தினர் கைப்பற்றியிருப்பதாக இறுதியாக வந்த செய்திகள் தெரிவிக்கின்றன. பஞ்சீர் பிராந்தியத்தின் ஆளுளர் மாளிகையில் தலிபான் இயக்கத்தினரின் கொடி பறக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. தாமே ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றியிருப்பதாகத் தலிபான் இயக்கத்தினரின் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

அதேசமயம், பஞ்சீர் பிராந்தியத்தின் இரகசிய இடங்களிலிருந்து எதிரணியினரின் தலைவர்கள் “தாம் முற்றாக முறியடிக்கப்படவில்லை, பஞ்சீர் முழுவதுமாகத் தலிபான்களிடம் இல்லை,” என்று அறிக்கை விட்டிருக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *