தனது 19 வயதில் 52 உலக நாடுகளுக்குத் தனியே விமானமோட்டும் சாதனையைத் தொடங்குகிறார் சாரா ருத்தர்போர்ட்.
பத்தொன்பது வயதான பிரிட்டிஷ் – பெல்ஜியரான சாரா ருத்தர்போர்ட் விமானிகளின் குடும்பத்திலிருந்து வந்தவர். அவரது தந்தை பிரிட்டிஷ் விமானப்படை விமானியாக இருந்தவர். தனது 14 வது வயதிலேயே விமானமோட்டப் பழக ஆரம்பித்தார். 52 நாடுகளுக்குத் தனியே விமானத்தில் பறக்கும் சாதனையை அவர் பூர்த்தி செய்வாரானால் அவ்வயதில் அதைச் செய்த உலகின் முதல் பெண் என்ற பெருமையைப் பெறுவார்.
முதலாவது பயணத்தை அவர் பெல்ஜியத்தில் தான் வாழும் Kortrijk நகரிலிருந்து தனது 325 கிலோ விமானத்தில் இங்கிலாந்துக்குப் பறப்பதில் ஆரம்பித்தார். ஐந்து கண்டங்களில், 51,000 கி.மீ தூரத்தை அவர் வரவிருக்கும் மூன்று மாதங்களில் கடக்கவிருக்கிறார். எந்தவொரு உதவி விமானமும் அவருக்குப் பின்னால் பறக்கப்போவதில்லை. உலகின் அதிக போக்குவரத்துக்கள் கொண்ட விமான நிலையங்களைத் தவிர்த்துச் சிறிய விமான நிலையங்களை அவர் தனது சாதனைக்காகப் பாவிப்பார்.
பிரிட்டனில் ஓரிரு நகரங்களைத் தொட்டுவிட்ட அவர் தற்போது ஐஸ்லாந்தில் ஓய்வெடுக்கிறார். கிரீன்லாந்து, சவூதி அரேபியா, மியான்மார், ஹொண்டுராஸ் ஆகிய நாடுகளிலும் இறங்குவதற்கான அனுமதியை அவர் பெற்றிருக்கிறார். அவரது பயண விபரங்களை https://flyzolo.com/ என்ற பக்கத்தில் தொடரலாம்.
“விஞ்ஞானம், தொழில் நுட்பம், கணிதம், பொறியியல், விமானமோட்டல் ஆகியவற்றில் இளம் பெண்கள் ஈடுபட ஊக்குவிக்கவேண்டும் என்பதே எனது நோக்கம்,” என்கிறார் சாரா.
டிராவிஸ் லட்லோ என்ற 18 வயது பிரிட்டிஷ்காரர் இச்சாதனையை ஜூலை மாதத்தில் செய்து முடித்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்