“ஆறாவது மாதத்திலேயே கொவிட் 19 தடுப்பு மருந்துப் பாதுகாப்பில் பலவீனம் உண்டாகிறது!”
பிரிட்டனில் ஆறு மாதங்களுக்கு முன்னர் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்களின் செயலிகளிலிருந்து அவர்கள் பின்பு தொற்றுக்குள்ளானார்களா போன்ற விபரங்களிலிருந்து செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின்படி அஸ்ரா செனகா, பைசர் பயோன்டெக் நிறுவனங்களின் தடுப்பு மருந்துகள் ஒருவரைக் கொவிட் 19 லிருந்து காக்கும் வீர்யம் குறைகிறது என்பது தெரியவருகிறது. தடுப்பூசி பெற்றவர்களின் விபரங்கள் பெறாதவர்களுடையவர்களிடம் ஒப்பிடப்பட்டன. ஒரு மில்லியன் பேரின் விபரங்கள் இதற்காக ஆராயப்பட்டன.
பைசர் பயோன்டெக் தடுப்பூசியின் பாதுகாப்பு வீர்யம் ஐந்தாம் மாதத்திலிருந்து ஆறாம் மாதத்துக்கு 88 % இருந்து 74% ஆக வீழ்ச்சியடைந்தது. அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்தின் வீர்யம் 77 % லிருந்து 67 % ஆக நான்காவதிலிருந்து ஐந்தாவது மாதத்தில் பலவீனமடைந்தது.
ஆறு மாதங்களுக்கு முன்னர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வயதானவர்களின் குழுவேயாகும். முழுவதுமான ஒரு பதிலைத் தெரிந்துகொள்ள இளவயதினருக்கு அது எப்படியான வகையில் செயற்படுகிறது என்பதையும் ஆராயவேண்டுமென்கிறார்கள், ZOE COVID study நிறுவனம். லண்டன் கிங்ஸ் கொலிஜ் உடன் சேர்ந்து இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டிருக்கிறது.
ஒரு மோசமான கணிப்பில் பார்த்தால் குளிர்காலம் வரும்போது வயதானவர்கள், மருத்துவ சேவையிலிருப்பவர்களின் தடுப்பூசி வீர்யமானது 50 % க்கு கீழே இறங்கலாம் என்று எச்சரிக்கிறார் ஆராய்ச்சியில் பங்குகொண்ட டிம் ஸ்பெக்டர்.
சாள்ஸ் ஜெ. போமன்