செப்டெம்பர் 10 திகதியிலிருந்து டென்மார்க்கில் “கொவிட் 19 சமூகத்துக்கு ஆபத்தானதல்ல” என்று பிரகடனப்படுத்தப்படும்.
வரவிருக்கும் செப்டெம்பர் மாதம் 10 திகதி முதல் டென்மார்க்கில் கொரோனாத் தொற்றுக்குக்கெதிரான கட்டுப்பாடுகள் அனைத்தும் அகற்றப்படும் என்று நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் மக்னுஸ் ஹுயுனிக்கெ அறிவித்திருக்கிறார். காரணம் டென்மார்க்கில் அதி பெரும்பாலானோருக்குக் கொவிட் 19 தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டுவிட்டது, அதனால் தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது என்கிறார் அவர்.
கொவிட் 19 ஆராய்ச்சியிலீடுபட்டு வரும் லோன சீமொன்ஸன் டென்மார்க் அரசுக்கு அத்தொற்றுக்கள் பற்றிய முடிவுகளை எடுக்க ஆலோசனை சொல்பவர்களில் முக்கியமான ஒருவராகும்.
“கொவிட் 19 இப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு ஒரு ஆபத்தான தொற்றுவியாதி. டென்மார்க்கில் மிகப் பெரும்பாலானோர் தடுப்பூசிகளைக் போட்டுக்கொண்டுவிட்டதால் எங்கள் மருத்துவ சேவைகளுக்கு முன்னரைப் போல கடுமையான பிரச்சினைகளை எதிர்நோக்கத் தேவையில்லாதிருக்கிறது. சமூகத்தில் பலருக்குத் தொற்றுக்கள் ஏற்பட்டாலும் கூடச் சிறிய எண்ணிக்கையில் தான் இறப்புக்கள் இருக்கிறது. எனவே நாம் இனிமேல் எமது சமூகத்தைத் திறக்கவேண்டும்,” என்கிறார் சீமொன்சன்.
எனவே செப்டம்பர் 10 ம் திகதி முதல் பொது இடங்களில் தடுப்பூசிச் சான்றிதழ் காட்டியே உள்ளே நுழையவேண்டும் போன்றவை உட்பட்ட கொரோனாக் கட்டுப்பாடுகள் சகலமும் டென்மார்க்கில் இல்லாமல் போய்விடும்.
சாள்ஸ் ஜெ. போமன்