சாதாரண ஒருவரை திருமணம் செய்துகொள்வதால் அரச குடும்ப மான்யத்தை இழக்கும் ஜப்பான் ராஜகுமாரி.
ஒரு வழியாக ஜப்பானியச் சக்கரவர்த்தியின் மருமகள் மாக்கோ திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்திருக்கிறார். 29 வயதான மாக்கோ நீண்ட காலமாகக் காதலித்துவந்த கெய் குமோரோவைக் கல்யாணம் செய்துகொள்வதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார். அரச குடும்பத்தினரல்லாத கெய் குமோரோவுடன் திருமணத்தின் பின்னர் அமெரிக்காவுக்குக் குடியேறவிருக்கிரார் மாக்கோ.
குமோரோ ஒரு சாதாரண குடிமகன் என்பதால் மாக்கோ தனது அரசகுடும்ப தகைமையை மட்டுமன்றி அரசகுடும்ப அங்கத்துவருக்குக் கிடைக்கும் சுமார் ஒரு மில்லியன் டொலர் மான்யத்தையும் இழப்பார். அடுத்த ஜப்பானிய பட்டத்துக்கு வரக்கூடிய அரசகுமாரன் ஹிஸஹீத்தோவின் சகோதரி மாக்கோவாகும்.
அது மட்டுமன்றி குமோரோ வேறொருவரைத் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்திருந்ததாகவும் அந்தப் பெண்ணிடம் குமோரோவின் தாய் கடன் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்ற கிசுகிசுக்களும் முன்பு எழுந்திருக்கின்றன. அத்தொகை 1.3 மில்லியன் டொலர்கள் என்றும் குறிப்பிடப்பட்டு வந்தது.
அந்தக் கதைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே குமோரோ அமெரிக்காவுக்குப் படிக்கச் சென்றதாகக் குறிப்பிடப்படுகிறது. கிசுகிசுக்களினால் மதிப்பிழந்த அவர்கள் அரச பாரம்பரியங்களில்லாத சாதாரண முறையில் திருமணம் செய்துகொள்வார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்