கொவிட் 19 லிருந்து பிழைத்த சிறுவனின் உயிரை நிபா கொடுநோய் பறித்தது.
மூன்று வருடங்களுக்கு முன்னர் 17 பேரின் உயிரைப் பறித்த நிபா என்ற நோய் மீண்டும் கேரளாவில் காணப்பட்டிருக்கிறது. அந்த நோயால் அங்கே ஒரு 12 வயதுச் சிறுவன் உயிரிழந்ததைக் கேரள அரசு தெரிவித்திருக்கிறது.
கோழிக்கோடு நகர மருத்துவ வட்டாரத்தில் இச்சம்பவம் நடந்திருப்பதாக மக்கள் ஆரோக்கிய அமைச்சர் வீணா ஜோர்ஜ் தெரிவித்திருக்கிறார்.
நிபா நோய்த் தொற்றால் இறந்த அந்தச் சிறுவனுடன் நேரடித் தொடர்பு கொண்டவர்கள் 20 பேர் என்றும் அவர்களில் இருவருக்கு அந்த நோய் தொற்றியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தங்கள் பங்குக்கு மேலும் 158 பேருடன் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் மருத்துவ சேவையினர் அவதானித்து வருகிறார்கள்.
நாலு நாட்களுக்கு முன்னர் காய்ச்சலால் அவதிப்பட்ட அந்தச் சிறுவனின் நிலை சனியன்று மோசமாகியது. ஞாயிறன்று அதிகாலையில் அந்தச் சிறுவனின் உயிர் பிரிந்தது.
முதல் தடவையாக 2018 இல் கேரளாவில் நிபா தொற்று நோய் காணப்பட்டது. பழங்களை உண்ணும் ஒரு வகை வௌவால்கள் மூலம் அவை பரவியிருப்பதை அவர்கள் கண்டறிந்தார்கள். அவ்வருட நடுப்பகுதிவரை 17 பேர் அவ்வியாதியால் இறந்தார்கள். மேலும் 18 பேரில் அது தொத்தியிருந்தது.
இதே சிறுவனுக்கு முன்பு கொவிட் 19 தொற்று ஏற்பட்டு அவன் குணமடைந்தான். இறந்த அவன் இருந்த மருத்துவப் பகுதி மூடப்பட்டிருக்கிறது. அவனது வீட்டைச் சுற்றி 3 கி.மீ பிராந்தியமும் மூடப்பட்டிருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்