மறைந்த பிரெஞ்ச் திரை நட்சத்திரத்திற்கு தேசிய அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு.
1960 களில் பிரெஞ்சு சினிமாவில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய மாபெரும் நடிகர்களில் ஒருவரான ஜீன்-போல் பெல்மொண்டோ(Jean-Paul Belmondo) தனது 88 ஆவது வயதில் பாரிஸ் இல்லத்தில் காலமானார்.
பிரான்ஸின் திரையுலக ரசிகர்களைத்துயரில் ஆழ்த்தியுள்ள அவரது மறைவைஒட்டிப் பல்வேறு தரப்புகளில் இருந்தும் இரங்கல் மற்றும் அஞ்சலிச் செய்திகள்வெளியிடப்பட்டுவருகின்றன.
நாட்டின் திரைத்துறைக் கலையின் ஒருமுக்கிய அடையாளமாக விளங்கிய பெல்மொண்டோவிற்கு அஞ்சலி செலுத்தும் தேசிய நிகழ்வு வியாழனன்று பாரிஸ்நகரில் Invalides சதுக்கத்தில் நடைபெறும் என்று எலிஸே மாளிகை அறிவித்துள்ளது. கேன் சினிமா விருதுக் குழுவினர் உட்படத் திரையுலகத்தினர் மற்றும் பொது மக்கள் அந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். பெல்மொண்டோவைப் போன்றே “பிரபலமாகவும்””எளிமையாகவும்” அஞ்சலி நிகழ்வு இடம்பெறும் என்று ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
உலகப் போருக்குப் பிந்திய பிரெஞ்சு சினிமாவின் முக்கிய அடையாளமாகவிளங்கும் பெல்மொண்டோ, சுமார் அரை நூற்றாண்டு காலம் தனது புகழ் பெற்றபுன்னகையால் உலகெங்கும் திரைகளில் மிளிர்ந்தவர். தனது நடிப்பின் மூலம் 1960 -70 களின் தலைமுறையினரிடையே தனது பாணியை நிலைநிறுத்திய அவரை’ரைம்’ சஞ்சிகை 1964 இல்”நவீன பிரான்ஸின் முகம்”என்று அறிவித்தது.
இந்தியத் தமிழ் சினிமா உலகில் எம். ஜி.ராமச்சந்திரன், சிவாஜி கணேசன் போன்றவர்கள் பதித்துச் சென்ற பரந்த சுவடுகளைப் போன்று பிரெஞ்சு சினிமா வரலாற்றில் தனக்கென ஒரு தடத்தைப் பதித்தவர் பெல்மொண்டோ.
பாரிஸின் புறநகரான Neuilly-sur-Seine இல் 1933 இல் பிறந்த பெல்மொண்டோ 1957 இல் தனது முதல் சினிமா படத்தில் தோன்றினார். சினிமாவில் பிரபல்யமடைவதற்கு முன்னர் குத்துச் சண்டை வீரராக விளையாட்டு உலகிலும் ரசிகர்களைக் கவர்ந்தவர். குத்துச் சண்டையில் சாதனைகளைப் படைத்துக் கொண்டிருந்த சமயத்தில் தேசிய நாடகக் கலைக் கூடத்திலும் பயிற்சி பெற்றுவந்தார்.
“Swords of Blood” (1962), “That Man from Rio” (1964) போன்ற படங்கள் பெல்மொண்டோவுக்கு உலக அளவில் ரசிகர்களையும்விமர்சனங்களையும் சேர்த்தன. 1970 களில் தனது சொந்த வீரதீரங்களை வெளிப்படுத்தும் பல பாத்திரங்களில் தோன்றி இளம் தலைமுறையினரிடையே பெரும் செல்வாக்குப் பெற்றார்.
அதிபர் எமானுவல் மக்ரோன் நடிகர் பெல்மொண்டோவின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள தனது அஞ்சலிப் பதிவில் அவரை நாட்டின் “தேசிய சொத்து” என்று வர்ணித்திருக்கிறார்.இறுதி ஆராதனையும் சடங்குகளும் வெள்ளிக்கிழமை முற்பகல் பாரிஸ் Saint- Germain-des-Prés தேவாலயத்தில்நடைபெறவுள்ளன.
குமாரதாஸன். பாரிஸ்.