ரஷ்யாவும், பெலாரூஸும் அரசியல், பொருளாதார ஒப்பந்தமொன்றில் நெருக்கமாகியிருக்கின்றன.
சோவியத் யூனியன் காலத்தில் ஒன்றாக இருந்த நாடுகளான ரஷ்யாவும், பெலாரூஸும் தனி நாடுகளாகிய பின்னர் முதல் தடவையாக தம்மிடையே நெருங்கிய கூட்டுறவைப் பல துறைகளிலும் ஏற்படுத்திக் கொள்வது பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றன. மொஸ்கோவில் நான்கு மணி நேரம் ஜனாதிபதிகள் புத்தின், லுகசென்கோவுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைகளின் பின்பு இருவரும் தமது முடிவைப் பத்திரிகையாளர்களுக்கு அறிவித்தனர்.
தமது எதிர்க்கட்சியினரை நாட்டில் தலையெடுக்க விடாமல் சகல நடவடிக்கைகளிலும் தயங்காமல் ஈடுபட்டு வரும் இருவரும் தமது நாடுகளை 28 துறைகளில் ஆழமான கூட்டுறவில் ஈடுபடவிருப்பதாகத் தெரிவித்தனர். அடுத்த கட்டமாக இரண்டு தலைவர்களும் தமது பாதுகாப்பு அமைச்சுகளுடன் கலந்தாலோசித்தபின் வரும் மாதங்களில் விபரங்களடங்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடவிருக்கிறார்கள்.
தொடர்ந்தும் வெவ்வேறு நாணயங்களையே பாவித்துக்கொண்டு, இரண்டு நாடுகளுக்கும் இடையேயிருக்கும் வங்கிகளிடையேயும், வர்த்த நிறுவனங்களிடையேயும் கூட்டுறவை அதிகரிப்பது திட்டமிடப்பட்டிருக்கிறது. நாடுகளின் பக்களுக்கு ஒரே விதமான சமூகப் பாதுகாப்பு, தொழிலாளர் உரிமைகளை வழங்குதல் மேலுமொரு எண்ணம்.
இராணுவக் கூட்டுறவு ஒரு முக்கிய விடயமாக இருக்கும். அதற்காக இரு நாடுகளின் இராணுவத்தினரிடையேயான ஒன்றிணைந்த போர்ப்பயிற்சி ஏற்கனவே நடந்து வருகிறது.
பெலாரூஸுக்கு ரஷ்யா தொடர்ந்தும் குறைந்த விலையில் எரிசக்தியை விற்கும். அத்துடன் பெலாரூஸின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ரஷ்யா குறைந்த வட்டியில் கடன்களைக் கொடுக்கும்.
சாள்ஸ் ஜெ. போமன்