சவூதி அரேபியாவிலிருந்து ஏவுகணைத் தாக்குதலைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பை அகற்றியது அமெரிக்கா.
சவூதி அரேபியாவின் விமான நிலையங்கள், இராணுவத் தளங்கள் தொடர்ந்தும் ஹூத்தி அமைப்பினரால் தாக்கப்பட்டு வரும் நிலையில் அமெரிக்கா தனது ஏவுகணைப் பாதுகாப்பு-தாக்குதல் அமைப்பை அங்கிருந்து சமீப நாட்களில் அகற்றியிருக்கிறது. சமீபத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படைகளை அகற்றி, “எமக்குச் சம்பந்தமில்லாத போரில் எங்கள் நாட்டு இராணுவத்தினர் உயிர்விடத் தேவையில்லை,” என்று தெளிவாகச் சொல்லும் அமெரிக்க ஜனாதிபதி மத்திய கிழக்குப் பாதுகாப்பைப் பற்றி எந்தத் திட்டம் வைத்திருக்கிறார் என்று அவர்களை நம்பியிருக்கும் சவூதி அரேபியாவும் அவர்களது நட்பு நாடுகளும் விசனத்துடன் யோசித்து வருகிறார்கள்.
ஆசிய நாடுகளை நோக்கிய பாதுகாப்புப் பிரச்சினை வெவ்வேறு கோணங்களிலிருந்து அதிகரித்து வருவதைச் சமீபகால அரசியல் கோடுபோட்டுக் காட்டுகிறது. ஈரானை மீண்டும் சர்வதேச வர்த்தகத்தில் இணைத்துக்கொள்வதற்கான “அணு ஆயுத ஆராய்ச்சி ஒப்பந்தம்,” பற்றிய பேச்சுவார்த்தைகள் ஜெனிவாவில் இடர்களையே எதிர்கொண்டுவருகிறது.
ஹூத்திகளின் தாக்குதல்கள், ஆசியப் பிராந்தியத்தில் தனது ஆக்கிரமிப்பைக் காட்டிவரும் சீனா, ஈரானின் மத்திய கிழக்கு அரசியல், ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்களின் தலையெடுப்பு ஆகிய பிரச்சினைகள் எதுவும் தற்போதைய நிலையில் சவூதி அரேபியாவுக்குச் சாதகமாகத் தெரியவில்லை.
“அகற்றப்பட்டிருக்கும் சில பாதுகாப்பு அமைப்புக்கள் நட்பு நாடான அமெரிக்காவுக்கும் எங்களுக்குமான பேச்சுவார்த்தையின் பின்னரே நடத்தப்பட்டது. சவூதி அரேபியா தனது மக்களையும், வான்வெளி, எல்லைகளையும் பாதுகாக்கும் பலம் கொண்டது,” என்று சவூதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை குறிப்பிடுகிறது.
சவூதியின் பிரின்ஸ் சுல்தான் வான்படை மையத்திலிருந்து ஒரு பகுதிப் பாதுகாப்புக்கள் அகற்றப்பட்டாலும் அமெரிக்கப் படைகளின் இருப்பு மத்திய கிழக்குப் பகுதியில் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கில் இருக்கிறது. அதைத் தவிர அப்பிராந்தியத்திற்கான பாதுகாப்பைப் பலப்படுத்தும் இராணுவ மையங்களை அங்கே வேகமாக மாற்றிக்கொள்ளும் வசதியும், திட்டமும் தம்மிடம் தயாராக இருப்பதாக பெந்தகன் பேச்சாளர் குறிப்பிடுகிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்