தென் சீனக் கடலுக்குள் வரும் வெளிநாட்டுக் கப்பல்கள் தமது விபரங்களைச் சீனாவுக்கு அறிவிக்கவேண்டும்!
செப்டெம்பர் முதலாம் திகதி முதல் தென் சீனக் கடல் பிராந்தியத்துக்குள் நுழையும் வெளிநாட்டுக் கப்பல்களெல்லாம் முதலில் சீனாவுக்கு அறிவிக்கவேண்டும் என்று சீனா அறிவித்திருக்கிறது. அக்கடலுக்குள் நுழைய முன்னர் தமது பெயர், அடையாளம், போகுமிடம், தமது கப்பலிலிருக்கும் சரக்குகள் என்ன போன்றவையை அறிவிக்கும்படி சீனா உத்தரவிட்டிருக்கிறது.
சீனாவின் அந்த அறிவிப்பு தென் சீனக் கடற்பிராந்தியத்தில் பிரச்சினைகளை உண்டாக்கியிருப்பதாக அதே கடலின் பாகங்களை நீண்ட காலமாகத் தமக்கு உரிமை கொண்டாடிவரும் நாடுகளும், அமெரிக்கா உட்பட்ட நாடுகளும் குறிப்பிடுகின்றன. பிலிப்பைன்ஸ், மலேசியா, வியட்நாம், புருனேய், இந்தோனேசியா, தாய்வான் ஆகிய நாடுகளும் அக்கடலின் பிரத்தியேக பாகங்கள், தீவுகள் தம்முடையவை என்று கோரி வருகின்றன.
சீனாவின் அந்த அதிகாரக் கோரிக்கையை அசட்டை செய்யப்போவதாகச் சொல்கிறது. மேற்கு பிலிப்பைன்ஸ் கடல் சீனா தனதென்று குறிப்பிடும் தென் சீனக் கடலின் ஒரு பகுதியாகும். சீனாவின் கிழக்காக உள்ள அப்பகுதி தனது என்று கூறும் பிலிப்பைன்ஸ் சீனாவின் மிரட்டலை எதிர்கொள்ள அமெரிக்காவின் உதவியை நாடியிருக்கிறது.
அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருக்கும் பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அமைச்சர் டெல்பின் லொரன்சானா தென் சீனக் கடலில் ஆக்கிரமிப்புச் செய்யும் சீனாவைத் தாம் எதிர்கொள்ள அமெரிக்காவின் நவீன ரக ஆயுதங்களைத் தாம் கொள்வனவு செய்யக் கோரியிருக்கிறார். பிலிப்பைன்ஸுக்கு அமெரிக்காவுடன் இருக்கும் பாதுகாப்பு உடன்படிக்கையையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.
சீனா குறிப்பிடும் தென் சீனக் கடல் எல்லைக்கான அதிகாரம் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதல்ல என்று சர்வதேச நீதிமன்றம் 2016 இல் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனாலும், அதை உதாசீனம் செய்து அந்தக் கடலில் பல செயற்கைத் தீவுகளை உண்டாக்கித் தனது இராணுவத்தை அங்கே ஸ்தாபித்து வருகிறது. அத்துடன் அக்கடலில் தனது கடற்படையின் ரோந்தையும் அதிகரித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்